ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிய போட்டி ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. அமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் பாகிஸ்தானை வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் பாகிஸ்தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் பந்து வீச்சில் அனலாக செயல்பட்ட இந்திய பவுலர்கள் துல்லியமாக விளையாடி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை அதிரடி காட்ட விடாமல் மடக்கிப் பிடித்தனர். அதனால் 20 ஓவரில் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. இந்திய அணிக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக அக்சர் படேல் 20, ரிஷப் பண்ட் 43 ரன்கள் எடுத்தனர்.
அப்ரிடி ஏமாற்றம்:
பந்து வீச்சில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். முன்னதாக இந்த உலகக் கோப்பையின் அம்பாசிடர்களாக இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் யுவராஜ் சிங் மற்றும் பாகிஸ்தானின் ஜாம்பவான் வீரர் சாகித் அப்ரிடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக அப்போட்டியை அந்த இருவருமே நேரடியாக மைதானத்தில் பார்த்தனர்.
சொல்லப்போனால் டி20 உலகக் கோப்பையை மைதானத்திற்கு கொண்டு வந்து வைத்த அவர்கள் தான் போட்டியையே துவக்கி வைத்தனர். ஆனால் கடைசியில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்ததால் சாகித் அப்ரிடி மிகவும் சோகத்துடன் இருந்தார். அப்போது தம்மிடம் ஆறுதல் சொன்ன யுவராஜ் சிங்கிடம் “இதற்குத் தான் பாதியிலேயே பாகிஸ்தான் வென்று விட்டதாக வாழ்த்து சொல்லாதீர்கள்” என்று சொன்னேன் என அப்ரிடி ஆதங்கத்துடன் பதிலளித்தார்.
இது பற்றி ட்விட்டரில் அவர்கள் இருவரும் பேசிய வீடியோவில் நிகழ்ந்த உரையாடல்கள் பின்வருமாறு.
யுவராஜ்: லாலா ஏன் நீங்கள் சோகமாக இருக்கிறீர்கள்? என்ன நடந்தது?
அப்ரிடி: நான் சோகமாக இருப்பது சரியா தவறா? நாங்கள் இந்தப் போட்டியில் தோற்றிருக்க வேண்டுமா? எங்களுக்கு 40 ரன்கள் தேவைப்பட்ட போது யுவராஜ் என்னிடம் “லாலா வாழ்த்துக்கள். இந்தியாவின் தோல்வியை பார்க்க முடியாது என்பதால் நான் போட்டியிலிருந்து வெளியேறுகிறேன்” என்று சொன்னார்.
இதையும் படிங்க: சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. பாகிஸ்தான் கனடா அணிக்கெதிராகவும் தோற்கும் – ஏன் தெரியுமா? ராயுடு கருத்து
(தொடர்ச்சி) அவரிடம் நான் “யுவி இன்னும் 40 ரன்கள் இருக்கிறது. இந்த பிட்ச்சில் அது அதிகம். எனவே முன்னதாகவே எனக்கு வாழ்த்து சொல்லாதீர்கள்” என்று சொன்னேன்.
யுவராஜ்: நான் உங்களிடம் பாகிஸ்தான் வெல்லும் என்று சொன்னேன். அதே சமயம் அங்கிருந்தும் இந்தியா வெல்லும் என்ற தன்னம்பிக்கை இருந்தது. வெற்றி தோல்வி விளையாட்டின் அங்கம். ஆனால் நம்முடைய அணிகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே முக்கியம்.