இவ்வளவு மோசமான அம்பயரா? இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நடுவர் மீது யுவராஜ் முதல் ரசிகர்கள் வரை அதிருப்தி

Womens Cricket
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை வரலாற்றில் 15ஆவது முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதில் நடப்புச் சாம்பியன் இந்தியாவையும், பாகிஸ்தானையும் தோற்கடித்து இளம் வீரர்களுடன் மிரட்டிய இலங்கை 6வது கோப்பையை வென்றது. அந்தத் தொடரைப் போலவே மகளிர் ஆசிய கோப்பையும் கடந்த 2004 முதல் நடைபெற்று வருகிறது. அதில் வரலாற்றில் இது வரை நடைபெற்ற 7 தொடர்களில் 6 கோப்பைகளை வென்றுள்ள இந்தியா வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. இருப்பினும் கடைசியாக கடந்த 2018இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்தியாவை தோற்கடித்த வங்கதேசம் முதல் முறையாக கோப்பையை வென்றது. இவ்விரு அணிகளை தவிர பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகள் மகளிர் இதுவரை ஆசிய கோப்பையை வென்றதில்லை.

அந்த நிலைமையில் 2022 மகளிர் ஆசிய கோப்பை அக்டோபர் 1ஆம் தேதியான நேற்று வங்கதேசத்தில் கோலாகலமாக துவங்கியது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தங்களுடைய முதல் லீக் போட்டியில் மோதின. சைலட் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 150/6 ரன்கள் சேர்த்தது. ஷபாலி வர்மா 10, மந்தனா 6 என முக்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்திய அணிக்கு அதிக பட்சமாக ஜெமிமா ரோட்ரிகஸ் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 76 (53) ரன்கள் குவிக்க கேப்டன் ஹர்மன்பிரீட் 33 (30) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

சர்ச்சை ரன் அவுட்:
அதை தொடர்ந்து 151 ரன்களை துரத்திய இலங்கை ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 18.2 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 30 (32) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஹேமலதா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இந்த தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜெமிமா ஆட்ட நாயகி விருதை வென்றார்.

இருப்பினும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 19 ஓவரில் 145/5 என்ற நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடைசி ஓவரில் களமிறங்கிய இந்திய வீராங்கனை பூஜா வஸ்திரக்கர் 1 (2) ரன்னில் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் கொடுக்கப்பட்டது நிறைய இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஏனெனில் 5வது பந்தில் ரன் எடுக்க ஓடி வந்த அவர் வெள்ளை கோட்டை நன்றாகவே தொட்டு ஒரு இன்ச் உள்ளே வந்த பின்புதான் விக்கெட் கீப்பர் பெய்ல்ஸை நீக்கி ரன் அவுட் செய்தது ரீப்ளையில் தெளிவாக தெரிந்தது.

- Advertisement -

அதனால் நிச்சயமாக அவுட்டில்லை என்ற நம்பிக்கையுடன் கடைசி பந்தை எதிர்கொள்ள பூஜா தயாராக நின்றார். ஆனால் அதை சோதிக்க அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொண்ட 3வது நடுவர் இலங்கை – இந்தியா உட்பட அனைத்து வீராங்கனைகளும் கடைசி பந்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதற்கு ஒருசில நொடிகள் முன்பாக அவுட் என அறிவித்தது அப்போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த வர்ணனையாளர் முதல் ரசிகர்கள் வரை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அதனால் ஏமாற்றமடைந்த பூஜா அதிர்ச்சியுடன் பெவிலியன் திரும்பினார். ஆனால் அவுட்டில்லை என்று தெளிவாகத் தெரிந்தும் நியாயமில்லாத தீர்ப்பை வழங்கிய 3வது நடுவர் “சிவானி மிஸ்ராவை” அனைத்து இந்திய ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர். அதன் உச்சகட்டமாக முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் தன்னுடைய அதிருப்தியை டுவிட்டரில் வெளிப்படுத்தியது பின்வருமாறு.

“இது 3வது நடுவரின் மிக மோசமான முடிவாகும். இது போன்ற தருணங்களில் சந்தேகத்தின் பலனை பேட்டிங் வீராங்கனையான பூஜாவுக்கு தான் அம்பயர் கொடுத்திருக்க வேண்டும்” என்று விமர்சித்தார். சமீப காலங்களில் உலக கோப்பை, ஆசிய கோப்பை, ஐபிஎல் என அனைத்து தொடர்களிலும் தராசின் முள்ளாக தீர்ப்புகளை வழங்க வேண்டிய நடுவர்கள் இப்படி குளறுபடிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதுவும் ஒன்றுக்கு 3 முறை சந்தேகத்தை விளக்கக் கூடிய நவீன டெக்னாலஜி தொழில்நுட்பங்கள் வந்தும் இதுபோன்ற தவறான முடிவுகளை நடுவர்கள் வழங்குவது வேதனையளிப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Advertisement