சர்வதேச கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019 முதல் பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு வரும் அவர் இந்திய கிரிக்கெட்டில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மேலும் பிசிசிஐ பணக்கார வாரியமாக திகழ்வதால் இதர நாட்டு வாரியங்களின் ஆதரவையும் ஜெய் ஷா பெற்றுள்ளார்.
அதனால் ஐசிசி தலைவர் பதவிக்கு அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் 35 வயதிலேயே அந்த பதவியை பெற்றுள்ள ஜெய் ஷா இளம் வயதில் ஐசிசி அமைப்பின் தலைவரானவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவருக்கு பெரும்பாலான இந்திய வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இருப்பினும் அவர் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றது பாகிஸ்தான் ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைப்பதாகவே இருக்கிறது.
வாழ்த்திய யூனிஸ் கான்:
ஏனெனில் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு பிரச்சனைகளால் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாட விரும்பவில்லை. அதனால் ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் ஜெய் ஷா இந்தியாவின் போட்டிகளை இலங்கையில் விளையாட வைத்தார். அதன் காரணமாக பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை வெற்றிகரமாக முடியவில்லை.
அதே போல தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடவில்லை என்ற செய்திகள் காணப்படுகின்றன. அதனால் ஐசிசி புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெய் ஷா ஒன்று 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை பாகிஸ்தானுக்கு வெளியே நகர்த்த அல்லது இந்தியாவை வெளிநாட்டில் விளையாட வைப்பதற்கு வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானுக்கு வாங்க:
இந்நிலையில் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெய் ஷா அவர்களுக்கு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தானுக்கு விளையாட அனுப்பி ஜெய் ஷா கிரிக்கெட்டையும் நேர்மையையும் காப்பாற்றுவார் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: ஆஸி மாதிரி இந்தியாவும் நியாயமா நடந்துக்கனும்.. இதை கங்குலியே சொல்லிருக்காங்க.. கம்ரான் அக்மல் கோரிக்கை
“ஜெய் ஷா ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டதன் வாயிலாக கிரிக்கெட் உயர வேண்டும். புதிய ஐசிசி தலைவரின் நல்ல முன் முயற்சிகளால் பாகிஸ்தானுக்கு வந்து இந்திய அணியால் விளையாட முடியும். எனவே அதற்கு தகுந்த நல்ல முடிவுகளை எடுத்து ஜெய் ஷா விளையாட்டின் நேர்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும். அதே போல இந்தியாவுக்கு சென்று பாகிஸ்தான் விளையாடும்” என்று கூறினார்.



