இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் கடந்த 2008க்கு முன் அனைத்து விதமான தொடர்களிலும் மோதி வந்தன. இருப்பினும் அந்த வருடம் மும்பையில் நடைபெற்ற பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவங்களால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா நிறுத்தியது. அத்துடன் ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதற்கும் பிசிசிஐ அதிரடியான தடை விதித்தது இதுவரை நீடிக்கிறது.
அந்த சூழ்நிலையில் 2023 கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அந்தத் தொடருக்காக பாகிஸ்தான் சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றியும் கண்டது. அதே போல வரும் பிப்ரவரி மார்ச் மாதம் பாகிஸ்தானில் 2025 சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. அந்தத் தொடரிலும் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு கோரிக்கை:
இந்நிலையில் 2016 டி20 உலகக் கோப்பை, 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு சென்று பாகிஸ்தான் விளையாடியதாகவும் கம்ரான் அக்மல் கூறியுள்ளார். எனவே அதே நியாயத்துடன் பாகிஸ்தானுக்கு வந்து இந்தியா விளையாட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றிய சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் ரசிகர்களை ஒன்றிணைக்கிறது”
“அதனாலேயே அது மற்ற போட்டிகளை விட உயர்ந்ததாக கருதப்படுகிறது. நாங்கள் 2004, 2007, 2011 உட்பட பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். அங்கே இந்திய வீரர்களுக்கு நிகராக எங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். இந்திய ரசிகர்கள் அன்பு மழையால் எங்களை நனைத்தனர். விடுப்பு நாட்களில் நாங்களும் ஹோட்டலுக்கு வெளியே ரசிகர்களை காணச் செல்வோம்”
ஆஸ்திரேலியா போல:
“எனவே கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட விரும்பும் எந்த அணியும் இந்தியாவுக்கு செல்லலாம். இந்திய ரசிகர்கள் உலகில் சிறந்தவர்கள். அதே போலவே பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட்டர்களை விரும்புகின்றனர். எங்கள் நாட்டுக்கு வந்த போதெல்லாம் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். அங்கு கிடைக்கும் வரவேற்பு பற்றி வீரேந்திர சேவாக், சௌரவ் கங்குலி ஆகியோர் பேசியுள்ளனர்”
“எனவே தற்போது தவற விடும் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடர்கள் நடைபெறுவதையே நாம் விரும்புகிறோம். அரசியலை ஒதுக்கிவிட்டு நாம் விரும்பும் கிரிக்கெட்டை விளையாட வேண்டும். ஆஸ்திரேலியா போன்ற அணிகள் பாகிஸ்தானுக்கு வரும் போது இந்தியா மட்டும் ஏன் வருவதில்லை? அதற்காக இரு அரசாங்கமும் பேச வேண்டும். முதலில் ஆசிய கோப்பையை எடுத்துக்கொண்ட நீங்கள் தற்போது சாம்பியன்ஸ் ட்ராபியையும் எடுக்கப் பார்க்கிறீர்கள்”
இதையும் படிங்க: பாவம்யா மனுஷன்.. 13 முறை.. 26 வயதிலேயே மொத்தமாக ஓய்வு பெறவிருக்கும் ஆஸி வீரர்.. ரசிகர்கள் சோகம்
“இந்தியா அழைத்தால் பாகிஸ்தான் அரசு எங்கள் அணியை அனுப்புகிறது. அதையே இந்திய அரசும் செய்ய வேண்டும். இருதரப்பு தொடரில் விளையாடினால் ஐபிஎல் பங்கேற்பும் தாமாக நடக்கும். ஒருவேளை ஐபிஎல் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை எங்களிடம் பிஎஸ்எல் இருக்கிறது. அது ஐபிஎல் தொடருக்கு நிகரானது இல்லையென்றாலும் நாம் இருதரப்பு தொடரில் விளையாடுவோம்” என்று கூறினார்.



