ஐபிஎல் வளர்ச்சியை யாராலும் நிறுத்த முடியாது, கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கபோகுது – ஜாம்பவான் கருத்து

IPL vs EPL
- Advertisement -

நவீன காலத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான போட்டிகள் கிரிக்கெட்டை மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட வைத்துள்ளது. அதில் கடந்த 2005இல் ரசிகர்களை கவர்வதற்காக துவங்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள் அதுவரை நடைபெற்று வந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 தொடராக உருவெடுத்தது. அதை பார்த்து கடந்த 2008இல் இந்திய கிரிக்கெட் வாரியம் துவங்கிய ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு புதுமையான பரிணாமங்களை கடந்து இன்று உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக மாறியுள்ளது. ஏனெனில் இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை செல்வதுடன் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை வருமானமாகக் கொட்டி கொடுக்கிறது.

- Advertisement -

அதனால் உலகக் கோப்பைகளை விட தரத்திலும் அதை நடத்தும் ஐசிசியை விட பணத்திலும் ஐபிஎல் தொடரும் பிசிசிஐயும் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது. அந்த நிலைமையில் வரும் 2023 – 2027 வரையிலான கால கட்டத்திற்கான ஒளிபரப்பு உரிமம் சமீபத்தில் 48,390 கோடிகளுக்கு ஏலம் போனதால் உலக அளவில் என்எப்எல் தொடருக்கு பின் ஈபிஎல், என்பிஏ ஆகிய அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் நடத்தும் கால்பந்து, கூடைப்பந்து தொடர்களை முந்தி அதிக வருமானத்தை கொட்டிக் கொடுக்கும் 2-வது விளையாட்டு தொடராக ஐபிஎல் உலக வளர்ச்சி கண்டுள்ளது.

விரிவும் பின்னடைவும்:
மேலும் ஏற்கனவே 74 போட்டிகளாக விரிவடைந்துள்ள ஐபிஎல் வரும் 2025 முதல் 84, 94 போட்டிகள் கொண்ட தொடராக மேலும் படிப்படியாக விரிவடைய உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் வெளிநாட்டு வீரர்கள் தடையின்றி பங்கேற்பதற்காக ஐசிசி கால அட்டவணையில் தேவையான மாற்றங்களைச் செய்யும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக முன்பை விட அதிகப்படியான தரமான போட்டிகளும் இரு மடங்கு பணமும் கிடைக்கப் போகிறது. அதேபோல் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் நிறைய இளம் தரமான வீரர்கள் கிடைப்பார்கள்.

IPL 2022

ஆனால் இந்த அசுர வளர்ச்சியால் சர்வதேச அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் குறைந்து ஒரு கட்டத்தில் அழிவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உருவாகியுள்ளது. அதனால் ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்தியா – இலங்கை, ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் போன்ற சர்வதேச அளவில் நடைபெறும் தரமற்ற இருதரப்பு தொடர்களுக்கு பதில் தரமான ஐபிஎல் தொடர் விரிவடைவதில் எந்த தவறுமில்லை என்று மற்றொரு தரப்பு ஆதரவும் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

தடுக்க முடியாது:
முன்னதாக ஐபிஎல் 2022 தொடர் முடிந்ததுமே தரமற்ற சர்வதேச டி20 தொடர்களை கால்பந்து போல உலக கோப்பையாக மட்டும் 2 வருடத்திற்கு ஒருமுறை நடத்திவிட்டு எஞ்சிய நேரங்களில் பெரிய ஐபிஎல் அல்லது 2 ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே அடுத்த மாதமே 84, 94 போட்டிகளுடன் ஐபிஎல் விரிவடைவதற்கான அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் வரும் காலங்களில் ஒரு வருடத்திற்கு ஒன்றரை மாதம் கொண்ட சிறிய தொடர் மற்றும் இரண்டரை மாதம் கொண்ட பெரிய ஐபிஎல் என 2 வகையான ஐபிஎல் தொடர்கள் நடைபெறப் போவதாகவும் அதை தடுத்து நிறுத்த முடியாது என்றும் ரவி சாஸ்திரி மீண்டும் கணித்துள்ளார்.

Shastri

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது வருமாறு. ” அனேகமாக உங்களுக்கு 2 ஐபிஎல் சீசன்கள் கிடைக்கப்போகிறது என்று நினைக்கிறேன். அது நடந்தால் நான் ஆச்சரியப்பட போவதில்லை. ஒருவேளை சர்வதேச இருதரப்பு தொடர்கள் குறைந்தால் வருடத்தின் கடைசி பகுதியில் உலகக் கோப்பை போலவே நாக்-அவுட் போட்டிகளுடன் வெற்றியாளரை தீர்மானிக்கும் சிறிய ஐபிஎல் நடைபெற வாய்ப்புள்ளது. அதில் ஒன்றரை மாதம் 10 அணிகள் விளையாடும் சிறிய தொடரும் இரண்டரை மாதம் 12 அணிகள் விளையாடும் பெரிய தொடரையும் நீங்கள் பார்க்க முடியும்”

- Advertisement -

“இவை அனைத்தும் பணம் மற்றும் கோரிக்கை ஆகியவற்றால் சாத்தியமானதாகும். ஐபிஎல் தொடருக்கு எப்போதுமே நிறைய டிமாண்ட் உள்ளது. எனவே அது விரிவடைவது கிரிக்கெட்டுக்கும், வீரர்களுக்கும், ஒளிபரப்பாளர்களுக்கும் அதில் பணிபுரிபவர்களுக்கும் பெரிய வரப்பிரசாதமாகும். தற்போது ஐபிஎல் அனைத்தையும் தனக்கு சொந்தமாக்க உள்ளது” என்று கூறினார்.

Ind-vs-aus-1

அதற்காக இந்தியா – ஆஸ்திரேலியா போன்ற தரமான சர்வதேச டி20 தொடரை ரத்து செய்யக்கூடாது என்று கோரிக்கை வைக்கும் அவர் தரமற்ற தொடர்களை மட்டும் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “சர்வதேச டி20 கிரிக்கெட்டின் இருதரப்பு தொடர்களை கவனத்துடன் கையாள வேண்டும்.

இதையும் படிங்க : ENG vs SA : மொய்ன் அலி மிரட்டல் சாதனை, பதிலுக்கு தெறிக்கவிட்ட தெ.ஆ இளம் வீரர் – விவரம் இதோ

அது குறைந்தால் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அல்லது எந்த நாடாக இருந்தாலும் அங்கு பிரீமியர் டி20 தொடர்கள் வளர்ச்சியடையும். அதனால் குறிப்பிட்டளவு தரமான இருதரப்பு தொடர்களை விளையாடி உலக கோப்பையையும் விளையாட முடியும். ஏனெனில் ஐசிசி உலக கோப்பை தொடருக்கு முக்கியத்துவம் கொடுப்பது முதன்மையானதாகும்” என்று கூறினார்.

Advertisement