13க்கு 1.. யுவராஜை நெருங்க முடியாதுன்னு சாபமிட்டேன்.. தோனியை தொடர்ந்து கபில் தேவை விமர்சித்த யோக்ராஜ்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் எம்எஸ் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக பாராட்டப்படுகின்றனர். குறிப்பாக மிடில் ஆர்டரில் நிறைய பார்ட்னர்ஷிப் அமைத்த அவர்கள் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். அந்த நிலையில் கேப்டனாக எம்எஸ் தோனி தன்னுடைய மகன் யுவராஜ் சிங் கேரியரை அழித்து விட்டதாக அவருடைய தந்தை மற்றும் முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் சிங் சமீபத்தில் கூறியிருந்தார்.

இன்னும் 5 – 6 இடங்கள் விளையாடியிருக்க வேண்டிய தம்முடைய மகனுக்கு தோனி வாய்ப்பு கொடுக்காமல் கேரியரை கெடுத்ததாக அவர் பகிரங்கமாக பேசியிருந்தார். மேலும் புற்றுநோயுடன் இந்தியாவுக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல உதவிய தம்முடைய மகனுக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

கபில் தேவையும் விடல:

அது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உண்மையில் புற்றுநோயை அறுவை சிகிச்சையால் வீழ்த்திய யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்த பின் தடுமாற்றமாகவே செயல்பட்டார். குறிப்பாக 2014 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் மெதுவாக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இருப்பினும் மீண்டும் அவரை தோனி 2016 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்திருந்தார். ஆனால் அப்போதும் பழைய செயல்பாடுகளை வெளிப்படுத்தத் தடுமாறிய யுவ்ராஜ் சிங்கை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலியும் 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் கழற்றி விட்டார். அது தெரியாமல் யோக்ராஜ் பேசுவதாக தோனி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

சாபம் விட்டேன்:

இந்நிலையில் 1981ஆம் ஆண்டு இந்திய அணியிலிருந்து தம்மை கழற்றி விட்ட அப்போதைய கேப்டன் கபில் தேவையும் யோக்ராஜ் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி ஜீ ஸ்விட்ச் யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய காலத்தின் மகத்தான கேப்டன் கபில் தேவ். அவரிடம் நான் “உங்களை உலகமே சபிக்கும் நிலையில் விட்டு செல்கிறேன்” என்று சொன்னேன்”

இதையும் படிங்க: என்னதான் இங்கிலாந்து மண்ணில் சதமடித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பில்லை – ரஹானேவிற்கு பி.சி.சி.ஐ செக்

“இன்று யுவராஜ் சிங் 13 கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால் கபில் தேவிடம் ஒரே ஒரு உலகக் கோப்பை (1983) மட்டுமே உள்ளது. இதுவே அந்த விவாதத்தின் முடிவு” என்று கூறினார். உண்மையில் யுவ்ராஜ் சிங் வெளிப்படுத்திய செயல்பாடுகளில் பாதியளவு கூட யோக்ராஜ் இந்தியாவுக்காக வெளிப்படுத்தியதில்லை. அதனால் அடுத்த வீரர்களுக்கு கபில் தேவ் வாய்ப்பு கொடுத்தது தவறா? என்று அவரை தற்போது ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.

Advertisement