
இந்திய கிரிக்கெட்டில் அவ்வப்போது வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு அதிரடி முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் 2011 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அணியில் பல ஜாம்பவான் வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி தலைமையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்தியா அடுத்தடுத்து படுதோல்விகளை சந்தித்தது.
அதற்குக் காரணமான நட்சத்திர சீனியர் வீரர்கள் கழற்றி விடப்பட்டு விராட் கோலி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் 2011 உலகக் கோப்பை வெற்றிக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 5 தோல்விகளை சந்தித்ததாக முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். அதனால் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியை நீக்குவதற்கு மொஹிந்தர் அமர்நாத் தலைமையிலான தேர்வுக்குழு முடிவெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதே போல தம்முடைய மகன் யுவராஜ் சிங், ராகுல் டிராவிட், கௌதம் கம்பீர் உள்ளிட்ட 7 ஜாம்பவான் வீரர்களை கழற்றி விட முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் யோக்ராஜ் பேசியது பின்வருமாறு. “நீங்கள் (பிசிசிஐ தேர்வாளர்கள்) எந்த காரணமும் இல்லாமல் இந்தப் பையன்களின் கேரியரை அழித்தீர்கள்”
“கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜகீர் கான், முகமது கைப், விவிஎஸ் லக்ஷ்மன், ராகுல் டிராவிட் போன்ற பையன்களின் கேரியரை முடித்தீர்கள். 2011க்குப்பின் அவர்களை நீங்கள் செல்ல வைத்தீர்கள். 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியை நீங்கள் அழிந்தீர்கள். 7 வீரர்களின் கேரியர் குழி தோண்டி புதைக்கப்பட்டது”
“அதனாலேயே நாம் தடுமாறுகிறோம். தோனி கேப்டனாக இருந்த போது நாம் 5 தொடர்களில் தோல்வியை சந்தித்தோம். அதனால் உங்களை மாற்றப் போகிறோம் என்று மோகிந்தர் அமர்நாத் சொன்னார். அது சரியான வழியல்ல” எனக் கூறினார். அவர் கூறுவது போல 2012, 13 காலகட்டங்களில் தோனியை டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்குவதற்கு தேர்வாளர்கள் முயற்சித்தார்கள்.
இதையும் படிங்க: அமெரிக்க டி20: 124க்கு ஆல் அவுட்.. 57 ரன்ஸ்.. நூர் அஹ்மத் மேஜிக்கில்.. லாஸ் ஏஞ்சல்ஸை சாய்த்த டிஎஸ்கே
ஆனால் அதை அப்போதைய பிசிசிஐ தலைவர் மற்றும் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் மறுத்து விட்டார். சொல்லப்போனால் அந்த முடிவை பரிந்துரைத்த அமர்நாத் தலைமையிலான தேர்வுக்குழுவை ஸ்ரீனிவாசன் அதிரடியாக நீக்கினார். அதனால் தொடர்ந்து விளையாடிய தோனி 2014 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.