
இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 67 போட்டிகளில் விளையாடி 2166 ரன்களை குவித்துள்ளார். அதேபோன்று சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக 2023-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதம் மற்றும் 12 அரைசதம் என 2209 ரன்களையும், ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி 15 ரன்களையும், 23 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் என 723 ரன்களையும் குவித்து அசத்தியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வரும் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியான இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். ஆனாலும் இடது கை அதிரடி ஆட்டக்காரரான இவர் நிச்சயம் மூன்று வகையான இந்திய அணியிலும் எதிர்காலத்தில் பிரகாசிப்பார் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது ஆதரவினை இவருக்கு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு இடம் கிடைக்காதது அப்போதே பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியிருந்தது. இந்நிலையில் ஆசிய கோப்பையில் இடம் கிடைக்காதது குறித்து முதல் முறையாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மவுனம் கலைத்துள்ளார்.
அதுகுறித்து ஜெய்ஸ்வால் பேசும்போது கூறியதாவது : ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்படாதது குறித்து எந்த ஒரு விடயத்தையும் யோசிக்கவில்லை. அதனால் எனக்கு வருத்தமும் கிடையாது. ஏனெனில் என்னை தேர்வு செய்வது தேர்வாளர்களின் கைகளில் தான் உள்ளது. அணியின் வெற்றிக்கான காம்பினேஷனை வைத்து தான் அவர்கள் வீரர்களை தேர்வு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது என்னை தேர்வு செய்ய முடியாததில் வருத்தம் கிடையாது. எனக்கான நேரம் வரும்போது எல்லா விடயங்களும் சரியாகவே நடக்கும். அதுவரை நான் கடினமாக உழைத்து என்னை மேம்படுத்திக் கொண்டே இருப்பேன். எதிர்காலத்தில் நான் நிச்சயம் இந்திய அணிக்காக மிகப்பெரிய அளவில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அசத்தியதன் மூலம் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – 43 வயது ஓமன் வீரர்
இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து உழைக்க இருக்கிறேன். இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வென்று தரவேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியமாக இருக்கிறது. கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றது என்னால் மறக்கவே முடியாத ஒன்று என யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.