8 ஃபோர்ஸ் 7 சிக்ஸ்.. 202 ரன்களில் தனி ஒருவனாக 100 ரன்கள்.. 2010 ரெய்னா போல சீறிப்பாய்ந்த ஜெய்ஸ்வால்

Yashasvi Jaiswal
- Advertisement -

விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் நேபாளை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. சீனாவின் ஹங்கொழு நகரில் இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 202/4 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர் ஜெய்ஸ்வால் சதமடித்து 100 (49) ரன்களும் ரிங்கு சிங் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 37* (15) ரன்களும் எடுக்க நேபால் சார்பில் அதிகபட்சமாக திபேந்திரா சிங் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 203 ரன்களை துரத்திய நேபாள் அணி முடிந்தளவுக்கு போராடிய போதிலும் இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் 20 ஓவர்களில் 179/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

தனித்துவ சாதனை:
அந்த அணிக்கு அதிகபட்சமாக திபேந்திரா சிங் 32 (15) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் ஆகி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கடைசியில் ரிங்கு சிங் 35*, சிவம் துபே 25* ரன்கள் எடுத்ததை தவிர்த்து கேப்டன் ருதுராஜ் 25, திலக் வர்மா 2, ஜிதேஷ் சர்மா 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

ஆனாலும் துவக்கவீரராக களமிறங்கி நேபாள் பவுலர்களை முதல் ஓவரிலிருந்தே சொல்லி அடித்த இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமடித்தார். குறிப்பாக 17 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட அவர் 8 பவுண்டடிகளையும் 7 சிக்ஸர்களையும் பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்து 204.08 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற சரித்திரத்தை படைத்தார்.

- Advertisement -

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த 2வது இந்திய இடது கை பேட்ஸ்மேன் என்ற பெருமையும் அவர் பெற்றார். இதற்கு முன் கடந்த 2010 டி20 உலக கோப்பையில் சுரேஷ் ரெய்னா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இடது கை வீரராக சதமடித்ததை ரசிகர்களால் மறக்க முடியாது. அதை விட இப்போட்டியில் எஞ்சிய இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே 40 ரன்கள் கூட தொடாத நிலையில் அவர் மட்டும் இந்தியா அடித்த 202 ரன்களில் தனி ஒருவனாக 100 ரன்கள் குவித்தார்.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் மற்ற வீரர்கள் 40 ரன்கள் கூட அடிக்காத போது சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்தார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அடித்து நொறுக்கி இந்தியாவுக்காக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அறிமுகமாகி அட்டகாசம் செய்த அவர் இப்போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு தன்னை வருங்கால நம்பிக்கை நட்சத்திர துவக்க வீரராக அடையாளப்படுத்தியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement