என் ரூட்ல விளையாட அந்த 2 பேரும் சுதந்திரம் கொடுத்தாங்க.. வங்கதேசத்தை வெளுத்த ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால்

Jaiswal 5
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செப்டம்பர் 27ஆம் தேதி மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியின் 2, 3வது நாட்கள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அதனால் இப்போட்டி கண்டிப்பாக டிராவில் முடிவடையும் என்று அனைவரும் பலரும் நினைத்தனர்.

ஆனால் நான்காவது நாளில் அபாரமாக விளையாடிய இந்திய அணி வங்கதேசத்தை 233 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 107* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வங்கதேசத்தை அடித்து நொறுக்கி 285-9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

- Advertisement -

மிரட்டல் வெற்றி:

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 50, 100, 150, 200, 250 ரன்கள் குவித்த அணியாகவும் இந்தியா உலக சாதனைகளை படைத்தது. அதிகபட்சமாக ஜெயஸ்வால் 72, விராட் கோலி 47, ராகுல் 68 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன், மெஹதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய வங்கதேசத்தை மீண்டும் 146 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது.

அதிகபட்சமாக சாத்மன் இஸ்லாம் 50 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக அஸ்வின், ஜடேஜா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 95 ரன்களை துரத்திய இந்தியாவை ஜெய்ஸ்வால் 52, விராட் கோலி 29* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தனர். அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை 2 – 0
(2) என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்த இந்தியா மழையையும் தாண்டி கோப்பையை வென்று அசாத்தியமான வெற்றியை பெற்றது.

- Advertisement -

ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால்:

இந்த வெற்றிக்கு அனைவருமே பங்காற்றினாலும் பேட்டிங்கில் அதிரடியாக 72 (51), 51 (45) ரன்கள் விளாசி டி20 போல விளையாடி முக்கிய பங்காற்றிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் தம்முடைய வழியில் விளையாடுமாறு சுதந்திரம் கொடுத்ததே அதிரடியாக ரன்கள் குவிக்க காரணம் என்று ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் நான் வெளுத்து வாங்க காரணம் – கே.எல் ராகுல் பேட்டி

“என்னுடைய அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். சென்னையிலும் இங்கேயும் சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது. அதில் என்னுடைய அணிக்காக சிறந்தவற்றை செய்ய என்னுடைய சிறந்த செயல்பாட்டை கொடுக்க முயற்சித்தேன். ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். ரோகித் பாய், கௌதம் சார் நான் விரும்பும் வழியில் விளையாடுமாறு சொன்னார்கள். நாம் சுதந்திரமாக விளையாடி கொஞ்சம் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று நாங்கள் பேசினோம். ஏனெனில் போட்டியை வெல்ல விரும்பிய நாங்கள் அதற்காக சென்றோம்” என்று கூறினார்.

Advertisement