
வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சென்னையில் துவங்குகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் வலைப்பயிற்சிகளை செய்து தயாராகியுள்ளனர்.
அந்தத் தொடரில் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் வங்கதேச பவுலர்களுக்கு சவாலை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்த அவர் தொடர்நாயகன் விருது வென்று 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் வங்கதேசத்தையும் அடித்து நொறுக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் 2023 – 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை ஜெய்ஸ்வால் 1028* ரன்கள் குவித்துள்ளார். எனவே வங்கதேச தொடரின் 2 போட்டிகளில் இன்னும் 132 ரன்கள் அடித்தால் ஒரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற அஜிங்கிய ரஹானேவின் சாதனையை உடைத்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைப்பார்.
இதற்கு முன் கடந்த 2019 – 2021 முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ரகானே இந்தியாவுக்காக அதிகபட்சமாக 1159 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. அதே போல கடந்த இங்கிலாந்து தொடரில் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்தார். அந்த வகையில் 2024 காலண்டர் வருடத்தில் அவர் இதுவரை மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 25* சிக்சர்கள் அடித்துள்ளார்.
எனவே வங்கதேச தொடரில் இன்னும் 9 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் ஜெய்ஸ்வால் படைப்பார். இதற்கு முன் நியூஸிலாந்தின் ப்ரெண்டன் மெக்கல்லம் 2016இல் 33 சிக்ஸர்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த 2 சாதனைகளையும் ஜெய்ஸ்வால் உடைப்பதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 2015லயே சென்னையில் அவருக்கு எதிரா ஆடுனேன்.. இப்போ நாட்டுக்காக விளையாடுவோம்ன்னு எதிர்பாக்கல.. லபுஸ்ஷேன் பேட்டி
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்ததை போல இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று வங்கதேசம் அணியினர் சவால் விடுத்து வருகின்றனர். ஆனால் கடந்த 12 வருடங்களாக இந்தியா சொந்த மண்ணில் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் இருந்து வருகிறது. அதனால் இத்தொடரிலும் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.