இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை மீண்டும் எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்ஷேன் தெரிவித்துள்ளார். கடந்த 2020 – 21 ஆஸ்திரேலிய தொடரில் முகமது சிராஜ் பேக்-அப் வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
அந்தத் தொடரில் பும்ரா, ஷமி ஆகியோர் ஆரம்பத்திலேயே காயமடைந்தனர். அதனால் அவருக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 36க்கு ஆல் அவுட்டான பின் ரஹானே தலைமையில் 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு மிகவும் முக்கிய பங்காற்றினார்.
சென்னை அகாடமி:
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் உள்ள எம்ஆர்எப் ஃபேஸ் பவுண்டேசன் அகடமியில் சிராஜும் தாமும் எதிரெதிர் அணிகளில் விளையாடியதாக லபுஸ்ஷேன் தெரிவித்துள்ளார். அங்கிருந்து முன்னேறி அவரும் தாமும் தற்போது தங்களுடைய நாட்டுக்காக விளையாடுவோம் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் லபுஸ்ஷேன் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“முகமது சிராஜுக்கு எதிராக என்னுடைய போட்டிகளை பல காரணங்களுக்காக நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன். உண்மையில் நாங்கள் 2015 – 16 காலகட்டங்களில் அகடமியில் இருந்தோம். அவர் எம்ஆர்எப் அகாடமியில் வேலை செய்தார். அப்போது அவருக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன். அப்போது தான் நாங்கள் முதல் முறையாக சந்தித்தோம். தற்போது அவருடைய கேரியர் இப்படி வந்துள்ளதை பார்க்கிறேன்”
இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்:
“சிராஜ் சிறப்பான ஆர்வம் எனர்ஜி மற்றும் கிரிக்கெட்டின் மீதான அன்பைக் கொண்டுள்ளார். அந்த வகையில் எங்களுடைய கேரியர் ஒன்றாக வித்தியாசமான அனுபவங்களுடன் நகர்வதை பார்ப்பது நன்றாக இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 2 டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்று மாபெரும் சாதனை படைத்தது.
இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரில் முக்கிய 2 வீரர்களுக்கு ஓய்வு வழங்க திட்டம் – வெளியான தகவல்
அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் களமிறங்கும் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இம்முறை ஷமி, பும்ரா, சிராஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஃபிட்டாகி தயாராக உள்ளனர். எனவே இம்முறையும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெல்லும் என்று இங்குள்ள ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.



