
இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கியது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் கேஎல் ராகுல் ஆகியோர் ஆரம்பத்திலேயே நிதானமாக விளையாடினர்.
இங்கிலாந்து வீசிய அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை நன்றாக சமாளித்த அந்த ஜோடி 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு அபார துவக்கத்தைக் கொடுத்து பிரிந்தது. அதில் ராகுல் 42 ரன்னில் பிரைடன் கார்ஸ் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். இதன் வாயிலாக லீட்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஒப்பனிங் ஜோடி என்ற சாதனையையும் அவர்கள் படைத்தனர்.
அடுத்ததாக வந்த தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அறிமுகப் போட்டியிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்து அசத்தினார். அவருடன் அடுத்ததாக கேப்டன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
கடந்த காலங்களில் வெளிநாட்டு மண்ணில் தடுமாற்றமாக விளையாடிய கில் நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் அரை சதத்தை அடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அவருடன் சேர்ந்து இந்த பக்கம் இங்கிலாந்து பவுலர்களை அபாரமாக எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் சதத்தை அடித்தார்.
இதன் வாயிலாக இங்கிலாந்து மண்ணில் விளையாடிய தனது முதல் இன்னிங்சிலேயே சதத்தை அடித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன் விஜய் மஞ்ச்ரேக்கர் (1952இல் 133), சந்திப் பாட்டில் (1982இல் 129*), சௌரவ் கங்குலி (1996இல் 131), முரளி விஜய் (2014இல் 146) இங்கிலாந்து மண்ணில் விளையாடிய தங்களுடைய முதல் ஆட்டத்திலேயே சதத்தை அடித்துள்ளார்கள்.
இதையும் படிங்க: அறிமுக போட்டியிலேயே மோசமான நிலையை சந்தித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் – இப்படியா நடக்கனும்?
அதில் தாதா சௌரவ் கங்குலி போல ஜெயஸ்வால் மட்டுமே 29 வருடங்கள் கழித்து இடது கை பேட்ஸ்மேனாக மாஸ் சதத்தை அடித்துள்ளார். அது போக இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் சதத்தை அடித்த முதல் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன் இம்மைதானத்தில் கவாஸ்கர் முதல் சேவாக் வரை எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் சதத்தை அடித்ததில்லை. அவருடைய அபார ஆட்டத்தால் முதல் நாள் தேநீர் இடைவெளியில் இந்தியா 215/2 ரன்கள் எடுத்துள்ளது.