குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை வெறும் 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 15.5 ஓவர்களில் 166 ரன்கள் குவித்து பிரம்மாண்டமான பார்ட்னர்ஷிப் அமைத்ததால் அந்த அணி எளிதான வெற்றியை பெற்றது.
இனியும் அவரது இந்த சிறப்பான ஆட்டம் தொடரும் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்கள் என 101 ரன்கள் குவித்து பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்தி இருந்தார். 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி தனது மூன்றாவது போட்டியிலேயே அதிரடியான சதம் விளாசியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து அவருடன் துவக்க வீரராக விளையாடிய யாஷஸ்வி ஜெயஸ்வால் வைபவ் சூர்யவன்ஷி குறித்து போட்டி முடிந்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே இது ஒரு நம்ப முடியாத இன்னிங்ஸ். நான் பார்த்ததிலேயே இது ஒரு சிறப்பான இன்னிங்ஸ் என்று கூறுவேன்.
மேலும் இனிவரும் போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் எங்கள் அணிக்காக தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் நம்புகிறேன். இந்த போட்டியின் போது அவர் விளையாடிக் கொண்டிருக்கையில் அதிரடியாக விளையாடவே அவரிடம் ஆலோசனைகளை வழங்கினேன்.
உண்மையிலேயே இன்றைய போட்டியில் அவர் அற்புதமான ஷாட்களை விளையாடினார். வலைப்பயிற்சியின் போது எவ்வாறு அவர் விளையாடினார் என்பதை நாங்கள் அருகில் இருந்து பார்த்திருக்கிறோம். அந்த வகையிலேயே இன்று அதிரடியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இனியும் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்று எனது வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.
இதையும் படிங்க : பவர்பிளே ஓவர்லயே எல்லாம் முடிஞ்சி போச்சு.. ராஜஸ்தான் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – சுப்மன் கில் வருத்தம்
இந்த போட்டியில் இறுதிவரை நின்று போட்டியை முடித்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் ஒருபுறம் நிற்க அவர் மறுபுறம் தனது பொறுப்பை உணர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவருடைய ஆட்டம் ரசிக்கும்படி இருந்தது என ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.



