நேரமும் வாய்ப்பும் கிடைச்சா.. கில் செய்யும் அந்த 2 வேலையையும் இந்தியாவுக்காக செய்வதே என் கனவு.. ஜெய்ஸ்வால்

Jaiswal
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானது முதல் நன்றாக விளையாடி வரும் அவர் இந்திய அணியில் ஓப்பனிங் இடத்தை தனதாக்கியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சதமடித்துள்ள அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

அதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் கடந்த தென்னாப்பிரிக்க தொடரின் 3வது போட்டியில் முதல் முறையாக சதமடித்து அசத்தினார். அதற்கு முன்னதாக சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டு டி20 போட்டிகளில் காலிறுதிப் போட்டியில் சதமடித்த ஜெய்ஸ்வால் இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

சுப்மன் கில்லுக்கு போட்டி:

அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு பெறாவிட்டாலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரிலும் வேகமான அரை சதமடித்து சாதனை படைத்துள்ள அவருக்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் சுப்மன் கில் இருப்பதால் ஓப்பனிங்கில் நிலையாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது தம்முடைய கனவு என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அதற்கான வாய்ப்பில்லை என்றாலும் நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் இந்தியாவுக்காக விளையாடத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அது மட்டுமின்றி இந்தியாவை கேப்டனாக தலைமைத் தாங்கவும் விருப்பப்படுவதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் விருப்பம்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது என்னுடைய கனவு. அதற்காக என்னுடைய ஆட்டத்தில் நான் கவனத்தை செலுத்த முயற்சித்து வருகிறேன். என்னுடைய நேரத்திற்காக காத்திருப்பேன். அது மட்டுமின்றி ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவை தலைமைத் தாங்குவதற்கும் நான் விருப்பப்படுகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: வெறும் 100 ரூபாய் முதல் 2026 டி20 உ.கோ டிக்கெட்.. ஆன்லைனில் எங்கே, எப்போது, எப்படி வாங்கலாம்? விவரம் இதோ

இதிலிருந்து சுப்மன் கில் செய்யும் 2 வேலையையும் இந்தியாவுக்காக திறம்பட செய்யத் தயாராக இருப்பதாக ஜெயஸ்வால் விருப்பம் தெரிவித்துள்ளார். இருப்பினும் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு சுப்மன் கில்லுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வாய்ப்பளித்து வருகிறது. அவருக்காக ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை கழற்றி விட்ட தேர்வுக்குழு 2027 உலகக் கோப்பைக்கு முன் விராட், ரோஹித்தையும் கழற்றி விட முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement