இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்தது. அதனால் 12 வருடங்கள் கழித்து இந்தியாவை அதனுடைய சொந்த ஊரில் தோற்கடிப்போம் என்று எச்சரித்ததை இங்கிலாந்து செய்து காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கம்பேக் கொடுத்த இந்திய அணி தொடரை சமன் செய்தது. அதே வேகத்தில் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஒரு படி மேலே சென்ற இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.
ஒரே இன்னிங்ஸில்:
அதன் காரணமாக 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா சொந்த மண்ணில் எங்களை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது என்பதை நிரூபித்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் வெறும் 22 வயதாகும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொண்டு 3 போட்டிகளில் 545* ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து வருகிறார்.
குறிப்பாக இரண்டாவது போட்டியில் 209 ரன்கள் குவித்த அவர் மூன்றாவது போட்டியில் 214* ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு எதிராக 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதிலும் குறிப்பாக மூன்றாவது போட்டியின் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் மொத்தம் 12 சிக்சர்கள் அடித்தார்.
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற வாசிம் அக்ரமின் உலக சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்தார். இந்நிலையில் தம்முடைய மொத்த கேரியரில் அடித்த சிக்ஸர்களை விட ஜெய்ஸ்வால் வெறும் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் டிஎன்டி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: நீங்க 600 ரன்ஸ் அடிக்கிற ஆளா? ஜெய்ஸ்வால் பற்றி பேச உரிமையில்ல.. டக்கெட்டை விளாசிய மைக்கேல் வாகன்
“என்னுடைய மொத்த கேரியரில் நான் அடித்ததை விட ஜெய்ஸ்வால் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளார்” என்று கூறினார். முன்னதாக 12 வருடங்களாக 161 போட்டிகளில் விளையாடி 12472 ரன்கள் குவித்த மகத்தான ஜாம்பவான் இங்கிலாந்து வீரரான அலெஸ்டர் குக் தன்னுடைய கேரியரில் வெறும் 11 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் ஜெய்ஸ்வால் ஒரே இன்னிங்ஸில் 12 சிக்சர்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.