பர்மிங்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூலை இரண்டாம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 587 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்துக்கு ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 87/5 என தடுமாறிய அந்த அணிக்கு ஹரி ப்ரூக் – ஜேமி ஸ்மித் ஆகியோர் 6வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர்.
அசத்தும் ஜெய்ஸ்வால்:
அதில் ஹரி ப்ரூக் சதத்தை அடித்து 158 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஸ்மித் சதத்தை அடித்து 184* ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் அவருக்கு கை கொடுக்க முடியாத அளவுக்கு மற்ற பேட்ஸ்மேன்களை துல்லியமாக பவுலிங் செய்து அவுட்டாக்கிய இந்திய அணி இங்கிலாந்தை 407 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.
அதிகபட்சமாக முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக 180 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் இந்தியா 3வது நாளின் முடிவில் 64/1 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 28 ரன்னில் அவுட்டான நிலையில் களத்தில் ராகுல் 28*, கருண் நாயர் 7* ரன்களுடன் உள்ளனர். இந்தப் போட்டியில் 2 இன்னிங்சிலும் சேர்த்து ஜெயிஸ்வால் மொத்தம் 115 ரன்கள் அடித்துள்ளார்.
இளம் நட்சத்திரம்:
இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 50 இன்னிங்ஸில் 2018 ரன்களை குவித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 2000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோருடைய சாதனைகளை சமன் செய்துள்ளார். இதற்கு முன் டிராவிட், சேவாக் ஆகியோரும் 40 இன்னிங்ஸில் 2000 ரன்கள் அடித்து சாதனை படைத்து நாளடைவில் ஜாம்பவான்களாக உருவெடுத்தனர்.
இதையும் படிங்க: டிஎன்பிஎல்: 4, 6, 6, 6, 6, 6.. சேப்பாக்கை வீட்டுக்கு அனுப்பிய விமல் குமார் மாஸ் சாதனை.. ஃபைனல் சென்ற திண்டுக்கல்
அதை விட ஜெய்ஸ்வால் 21 போட்டிகளிலேயே 2000 ரன்களை கடந்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டிகளின் அடிப்படையில் வேகமாக 2000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 1976ஆம் ஆண்டு கவாஸ்கர் தன்னுடைய 23வது போட்டியில் 2000 ரன்கள் கடந்ததே முந்தைய சாதனை.