IND vs WI : டி20யிலும் கால் பதித்த ஜெய்ஸ்வால் – ரோஹித் சர்மாவின் 14 வருட ஆல் டைம் சாதனையை உடைத்து இளம் புயலாக சரித்திர சாதனை

Jaiswal Rohit
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்னடைவுக்குள்ளானது. இருப்பினும் முக்கியமான 3வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்த இந்தியாவை வீழ்த்தும் முனைப்புடன் ஆகஸ்ட் 12ஆம் தேதி அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நடைபெற்ற 4வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து 20 ஓவர்களில் 178/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிம்ரோன் ஹெட்மயர் அதிரடியாக 61 (39) ரன்களும் சாய் ஹோப் 45 (29) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 179 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அதிரடியாக ரன்களை சேர்த்தனர். அதில் கடந்த போட்டியில் அறிமுகமாகி ஏமாற்றத்துடன் சென்ற ஜெய்ஸ்வால் இம்முறை அதற்கும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு முதல் ஆளாக அரை சதமடித்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

இளம் புயல் ஜெய்ஸ்வால்:
அவருடன் இந்த சுற்றுப்பயணத்தில் ஆரம்பம் முதலே சுமாராக செயல்பட்டு கிண்டல்களுக்குள்ளான சுப்மன் கில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி அரை சதமடித்து அசத்தினார். அந்த வகையில் ஒவ்வொரு ஓவருக்கும் 10க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை போதும் என்று சொல்லும் அளவுக்கு அடித்து நொறுக்கிய இந்த ஜோடி 15.3 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் வெற்றியை உறுதி செய்த போது கில் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 77 (47) ரன்களில் அவுட்டானார்.

ஆனாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 84* (51) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 17 ஓவரிலேயே 179/1 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2 – 2* (5) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து வெஸ்ட் இண்டீஸ்க்கு பதிலடி கொடுத்து அசத்தியுள்ளது. முன்னதாக 2020 அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற ஜெய்ஸ்வால் கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

அதே போல ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் அணியில் அசத்தி வந்த அவர் இந்த வருடம் உச்சகட்டமாக 625 ரன்கள் அடித்து அதிவேகமாக அரை சதத்தை விளாசி இரட்டை சரித்திர சாதனை படைத்ததார். அதனால் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற அவர் முதல் போட்டியிலேயே சதமடித்து ஏராளமான சாதனைகள் படைத்து அசத்தினார். அதைத்தொடர்ந்து டி20 கிரிக்கெட்டிலும் கடந்த போட்டியில் அறிமுகமாகி 1 ரன்னில் அவுட்டான அவர் தன்னுடைய இந்த 2வது போட்டியிலேயே அரை சதமடித்து அசத்தியுள்ளார்.

குறிப்பாக 21 வருடம் 227 நாட்கள் மட்டுமே நிரம்பியுள்ள அவர் இந்த அரை சதத்தின் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய துவக்க வீரர் என்ற ரோகித் சர்மாவின் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2009ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 22 வருடம் 41 நாட்களில் ரோகித் சர்மாவும் 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 22 வருடம் 41 நாட்களில் இஷான் கிசானும் துவக்க வீரர்களாக அரை சதமடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க:IND vs WI : என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்திற்கு அவங்களோட சப்போர்ட் தான் காரணம் – ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் மகிழ்ச்சி

தற்போது அவர்களுடைய சாதனைகளை உடைத்து இளம் புயலாக டி20 கிரிக்கெட்டிலும் கால் தடம் பதித்துள்ள ஜெய்ஸ்வால் முதலிடம் வகிக்கும் இந்த பட்டியலில் இங்கிலாந்துக்கு எதிராக அஜிங்க்ய ரகானே 23 வருடம் 86 நாட்களில் அரை சதமடித்து 3வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement