சென்னையில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 6, விராட் கோலி 6, சுப்மன் கில் 0 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதனால் 34-3 எனத் தடுமாறிய இந்திய அணிக்கு மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடினர். அவருடன் எதிர்புறம் சேர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட் 39 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 9 பவுண்டரியுடன் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேஎல் ராகுல் 16 ரன்களில் அவுட்டானதால் 144-6 என மீண்டும் இந்தியா தடுமாறியது.
சூப்பர்ஸ்டார் ஜெய்ஸ்வால்:
அப்போது ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வங்கதேசத்துக்கு சவாலை கொடுத்து 195* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றினர். அதில் அஸ்வின் சதமடித்து முதல் நாள் முடிவில் 102* ரன்களும் ரவீந்திர ஜடேஜா 86* ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். முன்னதாக இந்திய வீரர் ஜெய்ஸ்வால் கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் அவர் 712 ரன்கள் குவித்து இந்தியா 4 – 1 (5) என்ற கணக்கில் கோப்பையை வெல்ல உதவியதை மறக்க முடியாது. அதைத் தொடர்ந்து இப்போட்டியில் 56 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் இதுவரை இந்திய மண்ணில் விளையாடிய 10 டெஸ்ட் இன்னிங்ஸில் 768 ரன்களை குவித்துள்ளார்.
தனித்துவ 2 சாதனைகள்:
இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் “தனது சொந்த மண்ணில் விளையாடிய முதல் 10 இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்” என்ற உலக சாதனையை ஜெய்ஸ்வால் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் கடந்த 1935ஆம் ஆண்டு ஜார்ஜ் ஹெட்லி வெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தனது முதல் 10 இன்னிங்கில் 747 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.
இதையும் படிங்க: 147 வருட வரலாற்றில் ஆசிய வீரராக அஸ்வின் உலக சாதனை.. கபில் தேவ், ஜடேஜாவுக்கு சமமாக 2 சாதனைகள்
இது போக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளிலும் ஜெய்ஸ்வால் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்திருந்தார். தற்போதைய இப்போட்டியில் அடித்த 56 ரன்களையும் சேர்த்து “டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் தனது முதல் 6 போட்டிகளில் தொடர்ந்து 6 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த இந்திய வீரராக ஜெய்ஸ்வால்” தனித்துவமான சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் முன்னாள் இந்திய வீரர் ருசி மோடி தனது முதல் 5 போட்டிகளில் தொடர்ந்து 50+ ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.



