தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் போராடி 339-6 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, கில், விராட் கோலி ஆகியோர் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள். அப்போது நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 56 ரிஷப் பண்ட் 39, கேஎல் ராகுல் 16 ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். அதனால் 144-6 என இந்தியா தடுமாற்றமாக விளையாடிக் கொண்டிருக்கிறது.
ஆசிய வீரராக சாதனை:
அப்போது 8வது இடத்தில் களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சொந்த ஊரான சென்னையில் வங்கதேச பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொண்டார். அந்த வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதமடித்து 102* ரன்கள் குவித்துள்ளார். அவருடன் சேர்ந்து அசத்திய ரவீந்திர ஜடேஜா முதல் நாள் முடிவில் 86* ரன்கள் குவித்து அசத்தி வருகிறார்.
இப்போட்டியையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கிய போட்டிகளில் அஸ்வின் 4 சதங்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 8வது அல்லது அதற்குக் கீழ் வரிசையில் களமிறங்கி அதிக சதங்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. டேனியல் வெட்டோரி(நியூசிலாந்து): 5
2. ரவிச்சந்திரன் அஸ்வின்(இந்தியா): 4*
3. கம்ரான் அக்மல்(பாகிஸ்தான்)/ஜேசன் ஹோல்டர்(வெஸ்ட் இண்டீஸ்): தலா 3
147 வருட வரலாற்றில்:
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 2 சதம் மற்றும் இரண்டு 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் சாதனையும் அஸ்வின் சமன் செய்துள்ளார். ஆச்சரியப்படும் வகையில் கபில் தேவ் மற்றும் அஸ்வின் ஆகிய இருவருமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களுடைய கேரியரில் 2 சதங்கள் மற்றும் 2 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து இந்த சாதனை படைத்துள்ளனர்.
அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 1000+ ரன்கள் மற்றும் 100+ விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற ரவீந்திர ஜடேஜாவின் (1637 ரன்கள், 102 விக்கெட்டுகள்) உலக சாதனையை அஸ்வின் (1050 ரன்கள், 174 விக்கெட்டுகள்) சமன் செய்துள்ளார். இவை அனைத்தையும் விட 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 20 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களையும் பந்து வீச்சில் 30க்கும் மேற்பட்ட முறை 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரராக அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: இதுக்கு ரிஷப் பண்ட் ஸ்டைல் தான் கரெக்ட்.. ஜடேஜா ஹெல்ப் பண்ணாரு.. சென்னையில் அசத்திய அஸ்வின் பேட்டி
இது வரை அஸ்வின் 14 அரை சதம், 6 சதம் உட்பட 20 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களும் 36 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். அவரைத் தவிர்த்து உலகில் வேறு யாருமே இந்த சாதனையை படைத்ததில்லை.



