
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்ஹாம் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
நேற்றைய போட்டியில் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 107 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த இந்த 87 ரன்கள் மூலம் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் சாதனை ஒன்றினை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார். அந்த வகையில் ஜெய்ஸ்வால் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
சேனா நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ரோஹித் சர்மா நான்கு அரை சதங்களை அடித்திருந்த வேளையில் நேற்று யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அடித்த இந்த அரைசதம் மூலம் ஐந்து முறை சேனா நாடுகளில் அரைசதம் அடித்து அவரது சாதனையை கடந்துள்ளார்.
அதுமட்டும் இன்றி இந்திய அணியின் துவக்க வீரராக இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளை தனது ஏழாவது அரை சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஜெய்ஸ்வால் உள்ளார்.
இதையும் படிங்க : 7 தோல்விகளை சுமக்கலாமா? இதை விட பும்ராவுக்கு லார்ட்ஸ் முக்கியமா? கம்பீர் தவறை சாடிய சங்ககாரா
ஏற்கனவே முதல் போட்டியில் சதம் அடித்து அசத்திய அவர் அதே பார்மை இரண்டாவது போட்டியிலும் தொடர்ந்துள்ளது அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது. நேற்று 310 ரன்களுடன் இருந்த இந்திய அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.