7 தோல்விகளை சுமக்கலாமா? இதை விட பும்ராவுக்கு லார்ட்ஸ் முக்கியமா? கம்பீர் தவறை சாடிய சங்ககாரா

Kumar Sangakkara
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. எனவே தொடரை சமன் செய்ய ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கிய 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்துடன் இந்தியா களமிறங்கியுள்ளது.

அப்படிப்பட்ட முக்கியமான போட்டியில் பவுலிங் துறையின் முதுகெலும்பான ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடாதது பலருக்கும் ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. ஏற்கனவே காயத்தை தவிர்ப்பதற்காக அவர் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியளர் கௌதம் கம்பீர் அறிவித்து விட்டார். இருப்பினும் முதல் போட்டிக்குப் பின் ஒரு வாரம் ஓய்வு இருந்த காரணத்தாலும் 2வது போட்டியில் இந்தியா வென்றாக வேண்டும் என்பதாலும் பும்ரா விளையாடிருக்க வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

- Advertisement -

பாரமாக 7 தோல்விகள்:

இருப்பினும் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக இப்போட்டியில் ஓய்வெடுக்கும் பும்ரா லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள 3வது போட்டியில் விளையாடுவார் என்று கேப்டன் கில் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 9 போட்டிகளில் இந்தியா 7 தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் கௌதம் கம்பீர் தவறான வகையில் பும்ராவை பயன்படுத்துவதாக முன்னாள் இலங்கை ஜாம்பவான் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

தொடரை வெல்வதை விட லார்ட்ஸில் நடைபெறும் 3வது போட்டி முக்கியமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் சங்ககாரா பேசியது பின்வருமாறு. “இந்தியா எடுத்துள்ள முடிவையும், அது யார் எடுத்தார்கள்? என்பதையும் புரிந்து கொள்வது சுவாரசியமாக இருக்கும். அது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் விவாதிக்கப்பட்டப் பின் எடுத்ததா?”

- Advertisement -

சங்ககாரா விமர்சனம்:

“அல்லது இந்தத் தொடரை விட லார்ட்ஸ் போட்டி முக்கியம் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டதா? இந்தப் போட்டியில் கூட முதல் நாளில் இந்தியா 310/5 ரன்கள் எடுத்திருந்தாலும் வெற்றி இங்கிலாந்தின் பக்கமே சாய்ந்திருக்கிறது. எனவே பும்ராவிடம் பயிற்சியாளர் “ஆம் உங்களை 3, 5வது போட்டிகளில் விளையாட வைக்க நினைத்தோம். ஆனால் இப்போது 2, 3வது போட்டிகளில் விளையாடுங்கள், ஏனெனில் 3வது போட்டிக்கு முன் ஒரு வாரம் இடைவெளி இருக்கிறது” என்று சொல்லியிருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ரொனால்டோவை போன்ற பும்ராவை வெச்சு இப்படியா பைத்தியக் காரத்தனத்தை செய்வீங்க? கம்பீரை சாடிய ஸ்டைன்

“இது கடந்த போட்டிக்கான ரியாக்சன் மட்டுமல்ல. கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் நீங்கள் 7 தோல்வி 1 வெற்றி 1 டிராவை சந்தித்துள்ளீர்கள். எனவே நீங்கள் இறக்கி வைப்பதற்கும் மாற்றுவதற்கும் நிறைய பாரம் இருக்கிறது. அது போன்ற சூழ்நிலையை ஆராய்ந்து அதற்குத் தகுந்தார் போல் மாற்றங்களை செய்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement