ஆமையாய் துவங்கி மாஸ் காட்டிய இளம் வீரர் – ரஞ்சி கோப்பையில் சச்சின், ரோஹித் வரிசையில் அபார சாதனை

- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை 2021/22 சீசனில் விறுவிறுப்பாக நடைபெற்ற லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய மத்திய பிரதேசம் மற்றும் மும்பை ஆகிய அணிகள் மாபெரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. முன்னதாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த தொடரின் லீக் சுற்றில் தமிழகம் போன்ற அணிகள் வெளியேறிய நிலையில் மும்பை, பெங்கால், உத்தரபிரதேசம் போன்ற அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. அந்த நிலைமையில் ஜூன் 6இல் நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளில் வென்ற அணிகள் ஜூன் 14இல் துவங்கிய அரையிறுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்தின.

அதில் பெங்களூருவில் நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் உத்தரப்பிரதேசத்தை எதிர்கொண்ட மும்பை முதலில் பேட்டிங் செய்து 393 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து 100 ரன்களும் ஹர்டிக் டாமோர் சதமடித்து 115 ரன்களும் எடுத்தனர். உத்தரபிரதேசம் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கரண் ஷர்மா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த உத்தரபிரதேசம் மும்பையின் அற்புதமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 180 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிக பட்சமாக சிவம் மாவி 48 ரன்களை எடுத்தார்.

- Advertisement -

ஆமைவேக ஜெய்ஸ்வால்:
அதனால் 213 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பைக்கு கேப்டன் பிரிதிவி ஷா – யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் வித்தியாசமாக பேட்டிங் செய்தார்கள். ஆம் ஒருபுறம் பிரிதிவி ஷா சரவெடியாக பவுண்டரிகளை பறக்கவிட அவருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் பாறாங்கலாக மாறிய ஜெய்ஸ்வால் எதிர்கொண்ட அத்தனை பந்துகளையும் தடுத்து நிறுத்தினார். ஒரு கட்டத்தில் மும்பை எடுத்த 51/0 ரன்களில் ஷா மட்டும் அட்டகாசமாக அரைசதமடித்து 50* ரன்கள் எடுக்க மறுபுறம் ஜெய்ஸ்வால் 0* ரன்கள் மட்டுமே எடுத்தது அனைவரையும் வியக்க வைத்தது.

இறுதியில் மும்பை எடுத்த 66 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் முன்னாள் வீரர் சேவாக்கை போல் மிரட்டலாக பேட்டிங் செய்த பிரிதிவி ஷா 64 (71) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஒருவழியாக 54-வது பந்தில் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் போல முதல் ரன்னை பவுண்டரியுடன் எடுத்த ஜெய்ஸ்வாலுக்கு உத்தரபிரதேச எதிரணியினரே கைதட்டி பாராட்ட அதற்கு அவர் பேட்டை உயர்த்தி காட்டினார். ஆனால் அதன்பின் அட்டகாசமாக பேட்டிங் செய்த அவர் நிதானமாக ரன்களை சேர்த்து சதமடித்து 23 பவுண்டரி 1 சிக்சருடன் 181 ரன்களை விளாசினார்.

- Advertisement -

மாஸ் காட்டிய ஜெய்ஸ்வால்:
அவருடம் அர்மன் ஜாபர் 127 ரன்களும் சர்ப்ராஸ் கான் 55* ரன்களும் சம்ஸ் முலானி 51* ரன்களும் எடுத்ததால் 553/4 ரன்கள் எடுத்திருந்தபோது மும்பை தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்ததாக அறிவித்தது. ஆனால் அதற்குள் 5 நாட்கள் முடிந்ததால் புள்ளி பட்டியலில் டாப் இடத்தை பிடித்த மும்பை இறுதிப்போட்டிக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த போட்டியில் ஆமையைப் போல 54 பந்துகளில் 1 ரன்கள் கூட எடுக்காமல் மெதுவாக தொடங்கிய ஜெய்ஸ்வால் அதன்பின் அபாரமாக பேட்டிங் செய்து 181 ரன்கள் குவித்தது அவரின் உண்மையான பேட்டிங் திறமையை காட்டியது என்பதே நிதர்சனம்.

ஏனெனில் கிரிக்கெட்டில் 50 பந்துகளில் 100 ரன்கள் அடிப்பது கூட சுலபம். ஆனால் 100 பந்துகளை சந்தித்து 1 ரன்கள் எடுப்பது மிகவும் கடினமாகும். அதற்கு அதிகப்படியான மனத் தைரியமும் பொறுமையும் நிதானமும் உடல் உழைப்பும் தேவைப்படுகிறது. அதனால்தான் டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டே ஒரு வீரரின் உண்மையான திறமையை சோதிக்கும் போட்டி என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் 2021இல் தனது அறிமுக ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிராக வெறும் 19 பந்தில் 50 ரன்கள் அடித்த இவர் தம்மால் 54 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமலும் பேட்டிங் செய்ய முடியும் என்று காட்டியது உண்மையாகவே அவரின் திறமையாகும்.

சச்சின், ரோஹித் வரிசையில்:
இத்தனைக்கும் வெறும் 3 ரஞ்சி போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் நாக் அவுட் சுற்றில் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆகிய 2 போட்டிகளில் முறையே 35, 105, 100, 181 என 3 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். அதுவும் முக்கியமான அரையிறுதிப் போட்டியில் 2 இன்னிங்சிலும் சதம் அடித்தவர் ரஞ்சி கோப்பை வரலாற்றில் மும்பை அணிக்காக 2 இன்னிங்சிலும் சதமடித்த 9-வது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

அதனால் எஸ்எம் காட்ரி, உதய் மெர்சன்ட், டாட்டு பத்கர், வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, அஜிங்கிய ரகானே, வாசிம் ஜாபர் ஆகிய நட்சத்திர பேட்ஸ்மேன்களின் வரிசையில் அவரும் இணைந்துள்ளார். அதைவிட கடந்த 2020 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த அவர் வங்கதேசத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அரை சதம் அடித்துள்ளார். இதிலிருந்து நாக்-அவுட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு பேட்ஸ்மேன் வருங்காலத்தில் இந்தியாவுக்கு கிடைத்துள்ளார் என்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.

Advertisement