விராட் கோலி, உன்முக்த் வழியில் சாதனை படைத்த இளம் டெல்லி கேப்டன்! – குவியும் வாழ்த்துக்கள்

Dhull
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை மிகவும் விறுவிறுப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வரலாற்றில் 14வது முறையாக நடைபெறும் இந்த உலக கோப்பையானது கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று துவங்கியது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம் உள்ளிட்ட உலகின் டாப் 16 அணிகள் பங்கு பெற்றன. இந்த தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Under 19 World Cup

- Advertisement -

இந்த உலக கோப்பையில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்திருந்த “யாஷ் துள்” தலைமையிலான இந்திய அணி தனது லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் உகாண்டா ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த 3 போட்டிகளில் அடுத்தடுத்த 3 வெற்றிகளை பதிவு செய்து நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன்பின் துவங்கிய நாக்-அவுட் சுற்றின் காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

அசத்தல் கேப்டன் யாஷ் துள்:
அதை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த அரையிறுதி சுற்றில் 2வது அரையிறுதிப் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை இந்தியா சந்தித்தது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா 37/2 என மோசமான தொடக்கத்தைப் பெற்று ஆரம்பத்திலேயே தடுமாறியது.

IND-u-19

அந்த நேரத்தில் களமிறங்கிய இந்தியாவின் கேப்டன் யாஷ் துள் சக வீரர் ஷாய்க் ரசீத் உடன் இணைந்து மிகவும் அபாரமாக பேட்டிங் செய்து இந்தியாவை தூக்கி நிறுத்தினார் என்றே கூறலாம். ஏனெனில் அரைஇறுதி போன்ற முக்கியமான போட்டியில் சீனியர் இந்திய அணியினர் சமீப காலங்களாக எந்த அளவுக்கு மண்ணை கவ்வினார்கள் என நமக்குத் தெரியும். ஆனால் பிரஷர் பற்றி கவலைப்படாத இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை 290/5 ரன்கள் எடுக்க உதவினார்கள்.

- Advertisement -

இந்த ஜோடியில் சதம் விளாசிய யாஷ் துள் 110 ரன்கள் எடுக்க சதத்தை நழுவ விட்ட ஷாய்க் ரஷித் 94 ரன்கள் எடுத்தார்கள். பின்னர் 291 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவை தனது அபார பந்துவீச்சால் வெறும் 194 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. இதன் வாயிலாக இந்த உலக கோப்பையின் இறுதிப் போட்டிக்கு (2016, 2018, 2020, 2022*) தொடர்ந்து 4-வது முறையாக தகுதி பெற்ற முதல் அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்தது.

Yash Dhull

விராட் கோலி வரிசையில் சாதனை:
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த அரையிறுதிப் போட்டியில் சதமடித்த இந்திய கேப்டன் “யாஷ் துள்” ஐசிசி அண்டர் 19 உலக கோப்பை வரலாற்றில் சதம் அடித்த 3வது இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.இதற்குமுன் கடந்த 2008ஆம் மலேசியாவில் நடந்த அண்டர் 19 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு லீக் போட்டியில் வெறும் 74 பந்துகளில் சதமடித்த அப்போதைய கேப்டன் விராட் கோலி 100 ரன்கள் எடுத்து இந்த உலக கோப்பையில் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

அதன்பின் கடந்த 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த அண்டர் 19 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அப்போதைய கேப்டன் உண்முகுந்த் சந்த் 130 பந்துகளில் சதம் அடித்து 111* ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்து இந்தியாவிற்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அதன்பின் தற்போது யாஷ் துள் 3வது இந்திய கேப்டனாக 2022 அண்டர் 19 உலககோப்பையில் சதத்தை பதிவு செய்துள்ளார். இதில் ஆச்சரியப்படும் அம்சம் என்னவெனில் இந்த 3 வீரர்களுமே இந்தியாவின் தலைநகரான டெல்லியை சேர்ந்தவர்கள் என்பது வியக்க வைக்கிறது.

kohli u19

உலககோப்பையை வெல்வரா:
இதற்கு முன் விராட் கோலி மற்றும் உண்முகுந்த் சந்த் ஆகியோர் சதம் விளாசிய ஆண்டுகளில் இந்தியா உலக கோப்பையை வென்றது. எனவே அதேபோல அதே டெல்லியைச் சேர்ந்த யாஷ் துள் தற்போது சதமடித்துள்ளதால் இந்த வருடமும் அண்டர் 19 உலகக்கோப்பையை இந்தியா வெல்லுமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அண்டர் 19 உலகக்கோப்பையில் சதமடித்த 3வது இந்திய கேப்டன் என அறியும் போது மிகவும் பெருமையாக இருந்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி முடிந்த பின் தெரிவித்த “யாஷ் துள்” இறுதிப் போட்டியிலும் முடிந்தவரை மிகச் சிறப்பாக செயல்பட்டு 5வது முறையாக கோப்பையை இந்தியாவிற்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார். இதை அடுத்து இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதும் ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆண்டிகுவா நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement