இளம் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மிகவும் போராடி இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் 2023 சீசனில் குஜராத் அணிக்காக விளையாடினார். அத்தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சுமாராக பந்து வீசிய அவரை அடித்து நொறுக்கிய ரிங்கு சிங் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை பறக்க விட்டு வெற்றியை பறித்தார்.
அதனால் குஜராத் அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட யாஷ் தயாள் கடந்த தொடரில் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்டார். அந்த வாய்ப்பில் அசத்திய அவர் நடப்புச் சாம்பியன் சென்னைக்கு எதிரான கடைசிப் போட்டியில் தோனியின் விக்கெட்டை எடுத்து பெங்களூரு பிளே ஆஃப் செல்வதற்கு உதவினார். குறிப்பாக பிளே ஆஃப் செல்வதற்கு சிஎஸ்கே அணிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது.
விராட் கோலியின் அட்வைஸ்:
அந்த ஓவரின் முதல் பந்திலேயே முரட்டுத்தனமான சிக்சரை அடித்த தோனி ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது பந்தில் அவரை அவுட்டாக்கிய யாஷ் தயாள் மேற்கொண்டு ஜடேஜாவையும் ஃபினிஷிங் செய்யவிடவில்லை. அதனால் சிஎஸ்கே அணியை நாக் அவுட் செய்த பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது மறக்க முடியாததாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் யாஷ் தயாள் 2024 துலீப் கோப்பையின் முதல் ரவுண்டில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதனால் அடுத்து நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அப்போட்டியில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனியை அவுட்டாக்க விராட் கோலி தமக்கு திட்டம் கொடுத்ததாக யாஷ் தயாள் கூறியுள்ளார்.
100 டெஸ்ட் போட்டிகள்:
குறிப்பாக சிக்சர் அடித்த போது பதற்றமடையாமல் 2வது பந்தில் தோனிக்கு வேகத்தை கொடுக்காமல் கொஞ்சம் மெதுவாக வீசுமாறு விராட் கோலி சொன்னதாக யாஷ் தயாள் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தம்முடைய இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: என்னோட 800 விக்கெட்ஸ் சாதனையை யாராலும் உடைக்க முடியாது.. வருத்தமான காரணம் இது தான்.. முரளிதரன் பேட்டி
“மஹி பாய்க்கு எதிராக வேகத்தை கொடுக்க வேண்டாம் என்று விராட் பையா என்னிடம் சொன்னார். ஏனெனில் மஹி பாய் வேகமான பந்துகளை விரும்புவார். எனவே முதல் பந்து சிக்ஸர் சென்ற பின் விராட் பையா என்னை பதற்றமடையாமல் பந்து வீசுமாறு சொன்னார். அவருடன் பேசியது எனக்கு நிறைய உதவியது. அடுத்ததாக இந்தியாவுக்காக நீண்ட காலம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்” என்று கூறினார்.