ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் ஆரம்பத்திலேயே தொடர்ந்து 6 தோல்விகளை சந்தித்த அந்த அணி ஒரு மாதமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடியது. அதனால் முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அதன் பின் தொடர்ந்து 6 வெற்றிகளை பெற்று நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெற்ற வாழ்வா – சாவா போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு நடப்பு சாம்பியன் சென்னையை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது யாஷ் தயாளுக்கு எதிராக தோனி 110 மீட்டர்கள் சிக்சர் அடித்ததால் ஆர்சிபி தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் மனம் தளராத அவர் அடுத்த பந்திலேயே தோனியை அவுட்டாக்கி ஜடேஜாவையும் ஃபினிஷிங் செய்ய விடாமல் வெற்றி பெற வைத்தார்.
கிண்டலும் சாதனையும்:
சொல்லப்போனால் கடந்த வருடம் ரிங்கு சிங்கிற்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் கொடுத்து குஜராத் அணியின் ஜோக்கராக வெற்றியை தாரை வார்த்த அவர் இப்போட்டியில் தோனியை அவுட்டாக்கி ஆர்சிபி அணியின் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் ஆர்சிபி அணி 5 கோடிக்கு ஏலத்தில் வாங்கிய போது பலரும் தம்முடைய மகனை கிண்டலடித்ததாக யாஷ் தயாள் அப்பா சந்தர்பால் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அந்த மோசமான காலங்களைக் கடந்து தம்முடைய மகன் சாதித்துள்ளதாக பெருமை தெரிவிக்கும் அவர் இது பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “ஒரு வாட்ஸப் குழுவில் எனக்கு தெரிந்த நபர் யாஷ் 5 சிக்ஸர்கள் கொடுத்ததை கிண்டலடித்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அந்த புகைப்படத்தை பகிர்ந்து பிரேயக்ராஜ் (யாஷ்) கதை துவங்குவதற்கு முன்பாகவே முடிந்து விட்டதாக அந்த நபர் கிண்டலடித்தது இன்னும் நினைவிருக்கிறது”
“அந்த கிண்டல்கள் நிற்கவேயில்லை. அதனால் அனைத்து வாட்சப் குழுவிலிருந்தும் எங்களுடைய குடும்பம் மொத்தமாக விலகினோம். ஆனால் அப்போதும் ஆர்சிபி அணி 5 கோடிக்கு ஏலத்தில் வாங்கிய போது “பெங்களூரு அணி 5 கோடியை சாக்கடையில் வீசி விட்டது” என்று தயாளை ஒரு நபர் கிண்டலடித்தார். அந்த கிண்டல்களை பார்ப்பதற்கு பேசாமல் சமூக வலைதளங்களை மூடிவிட்டு உலகத்தில் வாழலாம் என்று நாங்கள் நினைத்தோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அந்த 2 பேர் துணையா இருக்காங்க.. ரோஹித்தின் அனுபவத்தால் இந்தியா டி20 உ.கோ வெல்லும்.. தவான் நம்பிக்கை
அந்த வகையில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள யாஷ் தயாள் 15 விக்கெட்டுகளை 8.94 எக்கனாமியில் எடுத்து அசத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு எதிர்கொள்கிறது. அந்த போட்டியிலும் ஆர்சிபி வெல்லும் என்ற நம்பிக்கையுடன் பெங்களூரு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.