- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒன்றாக களமிறங்கி விளையாடிய உ.கோ நாயகன்கள் கபில் தேவ் – எம்எஸ் தோனி, வைரல் வீடியோவின் விவரம் இதோ

இந்தியாவில் இன்று தேசிய விளையாட்டை மறக்கும் அளவுக்கு கிரிக்கெட் என்பது கிட்டத்தட்ட அனைத்து ரசிகர்களாலும் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு விளையாடப்படும் விளையாட்டாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த இந்தியாவை கடந்த 1983இல் இங்கிலாந்தில் கத்துக்குட்டியாக களமிறங்கி அந்த சமயத்தில் அசுரனாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்த தொடரில் அனைவருமே வெற்றிக்கு முக்கிய பங்காற்றினாலும் அனைத்து வீரர்களிடமும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி ஜிம்பாப்வேக்கு எதிராக யாராலும் மறக்க முடியாத 175* ரன்களை விளாசி பைனலில் ரிச்சர்ட்ஸ் கொடுத்த கேட்ச்சை கச்சிதமாக பிடித்து ஆல்-ரவுண்டராகவும் கேப்டனாகவும் அசத்திய கபில் தேவ் முக்கிய காரணமாக திகழ்ந்தார். அத்துடன் இத்தனை வருடங்களாகியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000+ ரன்கள் மற்றும் 400+ விக்கெட்டுகள் எடுத்த ஒரே ஆல்-ரவுண்டராக உலக சாதனை படைத்துள்ள அவர் இன்று இந்தியாவில் கிரிக்கெட் ஆழமாக வேரூன்ற முக்கிய காரணமானவர் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

அவருக்கு பின் அசாருதீன், கங்குலி, டிராவிட் போன்ற ஜாம்பவான் கேப்டன்கள் இந்தியாவை வழி நடத்திய போதிலும் 28 வருடங்கள் அடுத்த கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த இந்தியா கடந்த 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தோனி தலைமையில் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்களுடன் அற்புதமாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

ஒன்றாக உலககோப்பை நாயகன்கள்:
அந்த தொடரில் வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், ஜாஹிர் கான், கௌதம் கம்பீர் என அனைவருமே வெற்றிக்கு பங்காற்றினாலும் அந்த அனைவரையும் அற்புதமாக வழிநடத்தி மாபெரும் பைனலில் 91* ரன்களை விளாசி இப்போது நினைத்தாலும் புல்லரிக்க கூடிய சிக்சருடன் பினிஷிங் கொடுத்த எம்எஸ் தோனி முக்கிய காரணமாக இருந்தார். அதுபோக இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றிய அதிரடியான பேட்டிங், மின்னல்வேக விக்கெட் கீப்பிங், அபாரமான பினிஷர், ரோகித் சர்மா – விராட் கோலி போன்ற அடுத்த தலைமுறை வீரர்களை கண்டறிந்த தலைவன் போன்ற பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட தோனியும் இந்தியாவில் நவீன கிரிக்கெட்டை மிகவும் பிரபலப்படுத்தி ஏராளமான இளம் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் உலக கோப்பையை வென்ற கபில் தேவ் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோருக்கு எப்போதுமே இந்திய வட்டாரத்திலும் ரசிகர்களிடையேயும் தனி மரியாதையும் மதிப்பும் உள்ளது. இந்நிலையில் ஹரியானாவில் உள்ள குருகிராம் நகரில் டிஎல்எஃப் நிறுவனம் நடத்திய கோல்ப் விளையாட்டில் இந்த 2 ஜாம்பவான் கேப்டன்களும் ஒன்றாக களமிறங்கி கோல்ப் விளையாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த மார்ச் 2021இல் இந்திய கோல்ப் சங்கத்தின் உறுப்பினராக சேர்க்கப்பட்ட கபில் தேவ் தன்னுடைய மாநிலத்தில் நடைபெறும் இந்த தொடருக்கு எம்எஸ் தோனியை விருந்தினராக அழைத்திருந்தார். எப்போதுமே அவரை தன்னுடைய ரோல் மாடலாக நினைக்கும் தோனி அவருடைய அழைப்பை ஏற்று இந்த தொடரில் அவருடன் கோல்ப் விளையாடினார். அதில் தன்னுடைய நண்பரான ராஜீவ் சர்மாவிடன் மோதிய அவர் 5 போட்டிகளில் 4இல் வென்றதாக அத்தொடரை நடத்திய நிர்வாகம் கூறியுள்ளது.

அந்த போட்டிக்குப்பின் தோனியுடன் எடுத்த செல்ஃபியை கபில் தேவ் பகிர்ந்துள்ளார். இந்த 2 ஜாம்பவான்கள் இணைந்து விளையாடியதை பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற பிரபல யுஎஸ் ஓப்பன் டென்னிஸ் தொடரை இந்த 2 ஜாம்பவான்கள் ஒன்றாக இணைந்து பார்த்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும் கபில்தேவ் போலவே அமெரிக்காவில் உள்ள “மேட்டுச்சேன் கோல்ப் மற்றும் கன்ட்ரி கிளப்பின்” கௌரவ உறுப்பினராக இருக்கும் தோனி அமெரிக்கா செல்லும் போதெல்லாம் அங்கு கோல்ப் விளையாடி அந்த கிளப்பை பிரபலப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த 2019இல் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி 2020இல் ஓய்வு பெற்ற அவர் வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் நிலையில் 2023 சீசனுடன் சென்னை மண்ணில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by