ஐபிஎல் 2022 : பிளே ஆஃப் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெறுவது கடினம் – ஆரம்பத்திலேயே வாயை விடும் ஆகாஷ் சோப்ரா

Akash
- Advertisement -

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் சந்திக்கின்றன. வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களை மகிழ்விக்கும் இந்த தொடர் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL

- Advertisement -

இந்த தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக அனைத்து அணிகளும் கடுமையான பயிற்சிக்கு பின் தயாராகி உள்ளன. குறிப்பாக இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வாங்க முடியாமல் தவித்து வரும் டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகள் இந்த வருடம் முதல் கோப்பையை வென்றே தீரவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்க உள்ளன.

நம்பிக்கையுடன் பெங்களூரு ரசிகர்கள்:
அந்த வகையில் இந்த வருடம் புதிய கேப்டன் பப் டு பிளேஸிஸ் தலைமையில் புதிய ஜெர்ஸியுடன் புத்துணர்ச்சியாக களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை கையிலேந்த முழுமூச்சுடன் போராட உள்ளது. இதற்கு முன் ராகுல் ட்ராவிட், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்ற ஜாம்பவான்கள் வழி நடத்திய போதிலும் அந்த அணியால் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வாங்க முடியவில்லை.

faf du plessis RCB

குறிப்பாக 2013 – 2021 வரை தொடர்ந்து நீண்ட காலங்களாக கேப்டன்ஷிப் செய்த நட்சத்திர வீரர் விராட் கோலி பேட்டிங்கில் மலைப்போல ரன்களை குவித்து முழுமூச்சுடன் கோப்பையை வெல்வதற்கு போராடிய போதிலும் கடைசி வரை அந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த அவர் கடந்த வருடத்துடன் கேப்டன் பதவியில் இருந்து விலகி தற்போது மீண்டும் சாதாரண வீரராக விளையாட உள்ளார். எனவே விராட் கோலி போன்ற நட்சத்திரங்களால் முடியாவிட்டாலும் இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவுக்கு சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த அனுபவம் நிறைந்த டு பிளேஸிஸ் தலைமையில் பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என அந்த அணி ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

- Advertisement -

வாயை விடும் ஆகாஷ் சோப்ரா:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறுவது கடினம் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வருடம் ஆர்சிபி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என நான் கூறுவேன். ஒருவேளை எனது கணிப்பு முற்றிலும் தவறாக கூட இருக்கலாம். அவர்களால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் பெறமுடியும். ஒருவேளை அந்த சுற்றுக்கு அவர்களால் தகுதி பெற முடியாமல் போனால் அதற்காக நான் ஆச்சரியப்பட போவதில்லை. அந்த அணியில் டாப் ஆர்டரில் டு பிளேஸிஸ் மற்றும் மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக், மஹிபால் லோமரர் உள்ளனர். இருப்பினும் வணிந்து ஹஸரங்கா மீது அவர்கள் நிறைய பணத்தை செலவழித்துள்ளனர். அந்த சமயத்தில் சஹால் மற்றும் ராகுல் சஹர் போன்ற வீரர்களை அவர்கள் வாங்காதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. எனவே முந்தைய காலங்களில் அவர்களிடமிருந்த லோயர் மிடில் ஆடர் பிரச்சனை இந்த வருடமும் தொடர்கிறது” என கூறினார்.

chopra

அதாவது பெங்களூரு அணியில் ஒரு நல்ல தரமான இந்திய சுழல் பந்துவீச்சாளர் இல்லை என குறிப்பிட்டுள்ள ஆகாஷ் சோப்ரா கடந்த வருடங்களில் அந்த அணியின் பிரச்சனையாக இருந்த மிடில் ஆர்டர் பேட்டிங் இப்போதும் தீரவில்லை என குறிப்பிட்டுள்ளார். அதன் காரணமாக இந்த வருடம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினமான ஒன்று என ஆரம்பத்திலேயே அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறுவது போல பெங்களூர் அணியில் லோயர் மிடில் ஆர்டரில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் தவிர ஒரு தரமான வீரர் இல்லை என்பது பின்னடைவாக கருதப்படுகிறது.

- Advertisement -

மேக்ஸ்வெல் மீது நம்பிக்கை இல்லை:
“கிளென் மேக்ஸ்வெல் போன்ற ஒரு வீரர் 5 வருடங்களுக்கு ஒருமுறைதான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எப்போதாவது ஒருமுறை மட்டுமே அடுத்தடுத்த சீசன்களில் சிறப்பாக செயல்படுபவராக உள்ளார். இருப்பினும் அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்பலாம். ஆனாலும் ஐபிஎல் போன்ற அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் அவர் ஒரு ரிஸ்க் நிறைந்த பிளேயர்” என இதுபற்றி ஆகாஷ் சோப்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசன்களில் பெங்களூர் அணியின் மிடில் ஆர்டரில் ஜாம்பவான் ஏபி டிவிலியர்ஸ் விளையாடி வந்த போதிலும் கூட அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் தற்போது அவர் ஓய்வு பெற்றுள்ள நேரத்தில் கடந்த வருடம் பெங்களூர் அணிக்காக வாங்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் மீது அந்த பாரம் விழுந்துள்ளதாக கூறியுள்ள ஆகாஷ் சோப்ரா அதுபோன்ற சூழ்நிலையில் தொடர்ச்சியாக செயல்பட்டு வெற்றியை பெற்றுத்தரும் ஒருவராக அவர் இல்லை என கூறியுள்ளார்.

அவர் கூறுவதுபோல கடந்த 2014-ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் அதிரடி சரவெடியாக விளையாடிய அவர் அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. குறிப்பாக 2020 சீசனில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காத அவரை பஞ்சாப் அணி நிர்வாகம் கழட்டி விட்டதால் பெங்களூர் அணிக்கு விளையாட வந்த அவர் கடந்த வருடம் சிறப்பாக விளையாடி அந்த அணி ப்ளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற முக்கிய பங்காற்றினார். இருப்பினும் ஒவ்வொரு வருடமும் அதே போல அவர் சிறப்பாக செயல்படுவார் என உறுதியாக கூறமுடியாது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement