வேகம் தேவையான ஆஸ்திரேலியாவில் வேகமில்லாத அவர் திண்டாட போறாரு – இந்திய பவுலரை எச்சரிக்கும் பாக் ஜாம்பவான்

INDIA Dinesh Karthik Chahal Arshdeep Singh Harshal Patel Bhuvaneswar Kumar Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடர் கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் 2007க்குப்பின் எப்படியாவது 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஒரு வாரம் முன்னதாகவே ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக இத்தொடரில் களமிறங்கினாலும் சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வியும் முதன்மை பவுலர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Bumrah

- Advertisement -

அவரில்லாத சூழ்நிலையில் மற்றொரு சீனியர் புவனேஸ்வர் குமார் முதன்மை பவுலராக இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியை தலைமை தாங்க உள்ளார். ஆனால் கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அனுபவம் கொண்ட அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து பவர் ப்ளே ஓவர்களில் எதிரணிகளை மிரட்டினாலும் தேய்ந்து போன பழைய பந்தில் கடைசி கட்ட ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் சரமாரியாக அடி வாங்குகிறார். அதற்கு காரணம் 120 – 130+ கி.மீ என்ற அவருடைய மிதவேகம் பழைய பந்தில் செல்லுபடியாகாமல் காத்திருந்து பெரிய சிக்ஸர்களை அடிக்கும் அளவுக்கு பேட்ஸ்மேன்களுக்கு போதிய நேரத்தை வழங்குகிறது.

அடி வாங்கப்போகிறார்:
அதனாலேயே சமீபத்திய ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் பவர் பிளே ஓவர்களில் அசத்திய அவர் 19வது ஓவரில் ரன்களை வாரி வழங்கி இந்தியாவின் வெற்றியையும் தாரை வார்த்தார். மறுபுறம் இயற்கையாகவே வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றுக்கு கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் 130 – 140+ வேகத்தில் பந்து வீசினால் மட்டுமே பேட்ஸ்மேன்களை ஓரளவு சமாளிக்க முடியும் என்பதுடன் அங்கே வெள்ளைப் பந்து பெரும்பாலும் ஸ்விங் ஆகாது. மொத்தத்தில் இங்கிலாந்து போன்ற ஸ்விங் செய்வதற்கு உதவக்கூடிய கால சூழ்நிலையில் புதிய பந்தில் மிரட்டக்கூடிய புவனேஸ்வர் குமார் வேகத்துக்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலியாவில் தடுமாறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

இந்நிலையில் வேகமில்லாத புவனேஸ்வர் குமார் ஆஸ்திரேலியாவில் தடுமாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இந்தியாவை எச்சரித்துள்ளார். மேலும் பும்ரா இல்லாத நிலைமையில் வலுவான பேட்டிங் வரிசை சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடியும் என்று தெரிவிக்கும் அவர் பாகிஸ்தான் அணியில் நல்ல பந்து வீச்சு இருந்தும் மிடில் ஆர்டர் பேட்டிங் தடுமாறுவதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவிடம் புவனேஸ்வர் குமார் உள்ளார். புதிய பந்தில் அபாரமாக செயல்படக்கூடிய அவரிடம் இருக்கும் வேகம் பந்து ஸ்விங் ஆகாமல் போகும் பட்சத்தில் அவருக்கு மிகப்பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் அவர் நல்ல பவுலர் என்பதில் சந்தேகமில்லை. அவரிடம் இருபுறமும் ஸ்விங் செய்து யார்கர் பந்துகளை வீசும் திறமை உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் உங்களுக்கு வேகம் தான் தேவை. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த தொடரில் ஆஸ்திரேலியர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன்”

“ஏனெனில் நல்ல வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்டுள்ள அவர்கள் தங்களது நாட்டில் இருக்கும் பிட்ச்களை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். அதே போல் இந்திய அணியில் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது. ஆனால் அவர்கள் இன்னும் பும்ராவுக்கு மாற்று வீரர் அறிவிக்காமல் உள்ளனர். மறுபுறம் பாகிஸ்தான் அணியில் மிடில் ஆர்டர் திண்டாடுகிறது. ஒருவேளை அவர்களுடைய மிடில் ஆர்டர் அசத்தும் பட்சத்தில் அவர்களுக்கு கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்களிடம் மிகச்சிறந்த ஓப்பனிங் வேகப்பந்து வீச்சு கூட்டணி உள்ளது” என்று கூறினார்.

அவர் கூறுவது போல் பழைய பந்தில் 140 கி.மீ வேகத்தில் புவனேஸ்வர் குமார் பந்து வீச மாட்டார் என்பதால் 15 ஓவர்களுக்கு முன்னதாகவே கேப்டன் ரோகித் சர்மா அவருடைய 4 ஓவர்களையும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும். ஏனெனில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் பயிற்சிப் போட்டியில் பவர்பிளே ஓவர்களில் வழக்கம் போல மிரட்டிய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

Advertisement