இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் 2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நவி மும்பையில் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் பென் டன்ங் 15, பெர்குசன் 13, டேன் கிறிஸ்டின் 32, ரீட்ஆன் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் கேப்டன் வாட்சன் பட்டாசாக விளையாடி அரை சதத்தைக் கடந்தார்
வாட்சன் அதிரடி:
தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த அவர் 9 பவுண்டரி 9 சிக்ஸர்களை பறக்க விட்டு சதத்தை அடித்து 107 (52) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் பென் கட்டிங் 18 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ஆஸ்திரேலியா மாஸ்டர் 216 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜெரோம் டைலர் 2, ரவி ராம்பால் 2, அஸ்லே நர்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அடுத்ததாக 217 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் கிறிஸ் கெயில் 12 (11) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் ட்வயன் ஸ்மித் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்து 51 (29) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த லெண்டில் சிமென்ஸ் தம்முடைய முரட்டுத்தனமான ஸ்டைலில் ஆஸ்திரேலிய பவுலர்களை அடித்து நொறுக்கினார்.
சிமென்ஸ் முரட்டுத்தனம்:
அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் மற்றும் ஜாம்பவான் பிரைன் லாரா 5 பவுண்டரியுடன் 33 (21) ரன்களில் அவுட்டானார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து பட்டாசாக விளையாடிய சிமென்ஸ் 6 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்டு 94* (44) ரன்களை 213.64 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஃபினிஷிங் செய்தார். அவருடன் வால்டன் 23* 11) ரன்கள் எடுத்ததால் 19.2 ஓவரிலேயே 220-3 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க: மகளிர் ஐபிஎல்: வெறும் 8 ரன்ஸ்.. சூப்பர் ஓவரில் சொதப்பிய ஆர்சிபி.. யூபி த்ரில்லர் சாதனை வெற்றி
அந்த வகையில் இத்தொடரை லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் வெற்றிகரமாக துவங்கியது. மறுபுறம் வாட்சன் அதிரடியான சதம் அடித்தும் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா தொடப்பியதால் தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.



