மலிங்கா உட்பட நீங்க கேட்ட இளம்படை கிடைச்சுடுச்சு, அடுத்த வருடம் கம்பேக் குடுப்போம் – தோனி நம்பிக்கை

CSK Ms DHoni
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணி என்ற பெயருடன் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்ற 14 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை சந்தித்து பரிதாபமாக வெளியேறியது. ஆரம்பத்திலேயே 14 கோடிக்கு வாங்கப்பட்ட அந்த அணியின் நட்சத்திரம் தீபக் சாஹர் காயத்தால் விலகியது பெரிய பின்னடைவை கொடுத்த நிலையில் தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக கேப்டன்ஷிப் பொறுப்பை தேவையின்றி ரவீந்திர ஜடேஜாவிடம் வழங்கி மீண்டும் பெற்றுக் கொண்ட எம்எஸ் தோனியின் தவறான முடிவு தோல்விக்கான முதல் படியாக அமைந்தது.

மேலும் தொடரின் இடையே ஆடம் மில்நே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தால் விலகியதும் பின்னடைவை கொடுத்தது. சரி இருக்கும் வீரர்களாவது சிறப்பாக செயல்படுவார்களா என்றால் பார்த்தால் பேட்டிங் – பந்து வீச்சில் அவர்களும் சுமாராக செயல்பட்டு கைவிட்டனர். மொத்தத்தில் 2020க்கு பின் வரலாற்றில் 2-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வரலாற்றில் முதல்முறையாக 10 தோல்விகளை சந்தித்த சென்னைக்கு இந்த வருடம் மோசமாக அமைந்தது.

- Advertisement -

இளம் வீரர்கள்:
இதனால் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்த சென்னை ரசிகர்களுக்கு கடந்த 2020, 2021 ஆகிய அடுத்தடுத்த 2 சீசன்களில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடிய கேப்டன் எம்எஸ் தோனி இந்த வருடம் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து 50* ரன்கள் எடுத்தது உட்பட 232 ரன்கள் விளாசி ஓரளவு நல்ல பார்முக்கு திரும்பியது ஆறுதலாக அமைந்தது. அத்துடன் தனது மீது பாசத்தை வைத்துள்ள சென்னை ரசிகர்களுக்காக ஏற்கனவே தனது வாழ்நாளின் கடைசி போட்டி சென்னை மண்ணில்தான் நடைபெறும் என்று தெரிவித்திருந்த அவர் 2023இல் கண்டிப்பாக மீண்டும் கேப்டனாக விளையாடுவேன் என்று ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியின் முடிவில் தெரிவித்தது மிகப்பெரிய நிம்மதியைக் கொடுத்தது.

கடந்த 2008 முதல் நிறைய நட்சத்திர இளம் வீரர்களை வைத்து வெற்றிகளை அள்ளிய சென்னை 2018இல் தடையிலிருந்து மீண்டும் திரும்பிய போது அதிகமாக மூத்த வீரர்களை வாங்கி கிண்டலுக்கு உள்ளானாலும் அதே வருடத்தில் சாம்பியன் பட்டத்தை வென்று காட்டியது. ஆனால் அதன்பின் பெரும்பாலும் தடுமாற்றத்தையே சந்தித்து வரும் அந்த அணிக்கு சமீப காலங்களில் அதே வயதான வீரர்கள் தோல்வியின் காரணமாக அமைந்து வருகின்றனர். அதிலும் சென்னை அணியில் விளையாட குறைந்தது 40 வயதாவது வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது.

- Advertisement -

இளம்படை:
அத்துடன் பொதுவாகவே இளம் வீரர்களை நம்பும் எம்எஸ் தோனி சமீப காலங்களில் மூத்த வீரர்களை தேர்வு செய்தது பலருக்கும் ஆச்சரியமாகவும் அமைந்தது. இந்நிலையில் ஐபிஎல் 2023இல் பலரும் எதிர்பார்த்த இளம் படை இந்த வருட தோல்வியின் வாயிலாக கிடைத்துள்ளதாக கூறியுள்ள எம்எஸ் தோனி அடுத்த வருடம் அவர்களை வைத்து கடினமாக உழைத்து வலுவாக திரும்பி வந்து வெற்றி நடை போடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி நேற்றைய ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “தோல்வி என்பதைவிட முகேஷ் சவுத்ரி போன்றவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் மிக வேகமாக பாடங்களைக் கற்றுக்கொண்டு முன்னேற்றத்தை காண விரும்புகின்றனர். இளம் வீரர்களுக்கு அதுதான் தேவைப்படுகிறது. அடுத்த சீசன் அவர்கள் இடையிலிருந்து தொடங்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார்.

- Advertisement -

சென்னையின் மலிங்கா:
அதாவது இந்த வருடம் முகேஷ் சவுத்ரி போன்ற நிறைய இளம் வீரர்கள் நட்சத்திர வீரர்கள் காயமடைந்த பின்புதான் இடையில் வாய்ப்பு பெற்றதாக கூறும் எம்எஸ் தோனி அதில் அவர்கள் வேகமாக கற்று தேர்ந்துள்ளதால் அடுத்த வருடம் ஆரம்பத்தில் முதலே முழு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கடைசி 2 போட்டிகளில் விளையாடி ஜூனியர் மலிங்கா என்று அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வரும் இலங்கையின் மதீசா பதிரனா அடுத்த வருடம் முழுமையாக விளையாடுவார் என்றும் தோனி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “எங்களின் மலிங்கா (மதீஸா) அடிப்பதற்கு கடினமான பவுலராக உள்ளார். அவர் நிச்சயமாக அடுத்த வருடம் எங்களுக்கு நிறைய பங்காற்றுவார். நாங்கள் ஒரு சில தவறுகளை செய்தோம். இருப்பினும் அதை அணியாக செய்தோம். நீங்கள் பேட்ஸ்மேனாக இருந்தாலும் பவுலராக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பில் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட வேண்டும்.

இதையும் படிங்க : சென்னை அணியின் தோல்வியால் சிக்கலை சந்தித்த லக்னோ அணி – அடப்பாவமே இப்படியா ஆகனும்?

இது ஒரு வருடம் மட்டும் நடைபெறும் தொடர் கிடையாது. ஒவ்வொரு வருடமும் வந்து விளையாட வேண்டிய தொடராகும். அதிலும் அடுத்த 10 – 12 வருடங்களுக்கு முக்கிய வீரராக விளையாடுவதே முக்கியமானதாகும்” என்று வருங்காலங்களில் இளம் வீரர்கள் சென்னையை அலங்கரிப்பார்கள் என சூசகமாக கூறினார்.

Advertisement