IND vs ZIM : தோற்றாலும் பரவால்ல, வலுவான இந்தியாவுக்கு கடும் சவால் கொடுப்போம் – ஜிம்பாப்வே கோச் எச்சரிக்கை

INDvsZIM
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு மும்முரமாக தயாராகி வரும் இந்தியா ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக பங்கேற்ற தொடர்களில் தோல்வியே அடையாமல் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் அடுத்ததாக ஆசிய கோப்பையில் களமிறங்குகிறது. அதற்கு முன்பாக வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்தியா பங்கேற்க உள்ளது. சமீப காலங்களில் ஜிம்பாப்வே கத்துக்குட்டி அணியாக இருப்பதால் சீனியர் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு 2வது தர இளம் இந்திய அணி அங்கு விளையாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த வருடமும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் நட்சத்திரங்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு கேஎல் ராகுல் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்பதற்காக நேற்று தனி விமானம் வாயிலாக ஜிம்பாப்வே சென்ற இந்திய அணியினர் அங்கு தீவிர வலை பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். ஐசிசி ஒன்டே சூப்பர் லீக் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா ஜிம்பாப்வே அணியை தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பார்மில் ஜிம்பாப்வே:
இருப்பினும் இந்த தொடர் நடைபெறும் ஹராரே மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அடுத்தடுத்து அபாரமாக செயல்பட்ட ஜிம்பாவே அந்த 2 தொடர்களையும் வென்று நீண்ட நாட்களுக்குப் பின் சொந்த மண்ணில் தலைநிமிர்ந்தள்ளது. சிகந்தர் ராசா, இன்னசன்ட் கயா, கேப்டன் சக்கப்வா போன்ற வீரர்கள் அந்த அற்புதமான வெற்றிக்கு முக்கிய பங்காற்றி நல்ல பார்மில் இருக்கிறார்கள். மேலும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவது அந்த அணிக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கும் அம்சமாக உள்ளது.

எனவே வங்கதேசத்துக்கு எதிராக பெற்ற புத்துணர்ச்சியுடன் நல்ல பார்மில் இருக்கும் ஜிம்பாப்வே இந்த தொடரில் வலுவான இந்தியாவுக்கு எதிராக வெற்றிக்காக போராடும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் வெற்றி தோல்வி என்பதை தாண்டி இந்தியாவுக்கு கடுமையான சவாலை கொடுக்க காத்திருப்பதாக ஜிம்பாப்வேயின் தலைமை பயிற்சியாளர் தேவ் ஹூக்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

வெற்றிக்கு போராடுவோம்:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த சில வருடங்களாக இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரை பார்த்ததிலிருந்து இந்தியாவால் 3 அல்லது 4 அணிகளை உருவாக்க முடியும் என்று எங்களுக்கு தெரியும். அவர்கள் எந்த வகையான அணியை அனுப்பினாலும் அதிலுள்ள வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியதை பொறுத்து வலுவான அணியாக இருக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம். எனவே இந்த தொடர் எங்களுக்கு கடினமான ஒன்றாக அமைய போகிறது”

“ஆனால் இந்தியா இங்கு வருவது உலகின் மிகச்சிறந்த அணிக்கு எதிராக நம்மால் உண்மையிலேயே மிகப்பெரிய கோல் அடிக்கவும் நல்ல வெற்றிகளை பெறுவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பென்று வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டம் முடிந்து நாங்கள் கலைந்து செல்வதற்கு முன்பாக எங்களது அணி வீரர்களிடம் உடைமாற்று அறையில் கூறியுள்ளேன். மேலும் போட்டிகளின் எண்ணிக்கையை கூட்டி நமக்கு எதிராக இந்தியா நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதைப் பார்க்க நாம் இங்கு வரவில்லை அவர்களுக்கு சவால் கொடுக்க இங்கே இருக்கிறோம் என்று எங்களது அணி வீரர்களிடம் கூறியுள்ளேன். எனவே இந்த 3 போட்டிகளில் நாங்கள் இந்தியாவுக்கு கடுமையான சவால் கொடுப்போம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

அவர் கூறுவது போல இந்த தொடரில் உண்மையாகவே இந்தியாவுக்கு சவால் கொடுக்கும் அளவுக்கு ஜிம்பாப்வே செயல்பட்டால் இந்திய ரசிகர்களே மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என்று கூறலாம். ஏனெனில் 90களில் ஆண்டி பிளவர் போன்ற தரமான வீரர்கள் நிறைந்திருந்த ஜிம்பாப்வே அணி இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற உலகின் டாப் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது.

ஆனால் அவர்களது ஓய்வுக்குப் பின் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாத காரணமும் பொருளாதார நெருக்கடியும் அந்நாட்டு கிரிக்கெட்டை கத்துகுட்டியாக மாற்றி விட்டது. எனவே இத்தொடரில் இந்தியாவுக்கு சவாலைக் கொடுக்கும் அளவுக்கு ஜிம்பாப்வே தரமாக செயல்பட்டால் அது வரவேற்கத்தக்கதாகும். ஏனெனில் ஒரு போட்டியில் மோதும் இரு அணிகளும் பலமாக இருந்தால் தான் அது உண்மையான போட்டியாக அமைந்து ரசிகர்களுக்கு அனல் பறக்கும் திரில்லர் விருந்தை படைக்கும்.

Advertisement