டி20’லாம் பழசு, இனிமேல் சிஸ்க்ட்டி தான் புதுசு ! ஐபிஎல்’க்கு போட்டியாக உருவாகியுள்ள புதிய கிரிக்கெட் தொடர், ரூல்ஸ் இதோ

- Advertisement -

ரசிகர்களின் அபிமான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 முதல் மே 29 வரை கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளும் சேர்த்து 10 அணிகள் விளையாடியதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் 65 நாட்களாக பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த போட்டிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்தது. கடந்த 2008இல் 8 அணிகளுடன் துவங்கப்பட்ட சாதாரண தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டு பல புதிய பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த தொடரில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று எதிர்பாராத திருப்பங்களை முடிவாக கொடுப்பதால் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட ஐபிஎல் தரமான தொடராக உருவெடுத்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டிக் கொடுக்கும் இந்த ஐபிஎல் தொடரால் இன்று ஐசிசியை விட பிசிசிஐ உலகின் நம்பர் ஒன் பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது. அதனால் உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒரு சக்தியாகவும் ஐபிஎல் எதிர்பாராத அபரித வளர்ச்சி கண்டுள்ளது.

- Advertisement -

புதிய சிஸ்க்ட்டி:
அதேபோல் நூற்றாண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகளையும் 90களில் பிரபலமாக விளங்கிய ஒருநாள் போட்டிகளையும் 2005இல் துவங்கப்பட்ட சர்வதேச டி20 போட்டிகளையும் பின்னுக்கு தள்ளியுள்ள ஐபிஎல் இன்று உலக அளவில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடராகவும் வளர்ந்துள்ளது. அப்படி பிரம்மாண்ட வளர்ச்சி கண்டதை பார்த்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகள் சமீப காலங்களில் ஐபிஎல் தொடருக்கு போட்டியாக தங்களது நாடுகளில் பிரத்யேக டி20 தொடர்களை நடத்தினாலும் ஐபிஎல் உச்சத்தை இன்னும் தொட முடியவில்லை. மேலும் ஐபிஎல் தொடரை பின்னுக்கு தள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 100 பந்துகளை கொண்ட ஹண்ட்ரட் தொடரை இங்கிலாந்தும், 10 ஓவர்கள் கொண்ட டி20 தொடரை கனடா போன்ற வெளிநாடுகள் அறிமுகப்படுத்திய போதிலும் ஐபிஎல் தொடருக்கு உண்டான மவுசு கொஞ்சமும் குறையவில்லை.

இந்நிலையில் ஐபிஎல், ஹண்ட்ரட், 10 ஓவர்கள் போன்ற கிரிக்கெட் தொடர்கள் எல்லாம் பழசு இனிமேல் எங்களின் சிஸ்க்ட்டி தொடர் தான் புதுசு என்ற வகையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் புதிதாக ஒரு கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஐபிஎல் தொடரை போல ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கரிபியன் பிரீமியர் லீக் எனப்படும் சிபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அந்த தொடரின் 10-வது சீசன் வரும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

- Advertisement -

அந்த தொடருக்கு முன்பாக “சிக்ஸ்டி” எனப்படும் 60 பந்துகள் கொண்ட புதிய தொடரை முதல் முறையாக நடத்த உள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சிபிஎல் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. சிபிஎல் தொடருக்கு முன்பாக வரும் ஆகஸ்ட் 24 – 28 வரை செயின்ட் கிட்ஸ் நகரில் இத்தொடர் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு வாரியம் அதில் சிபிஎல் தொடரில் பங்கேற்கும் 6 ஆடவர் அணிகளும் 3 மகளிர் அணிகளும் தனித்தனியாக சிக்ஸ்டி தொடர்களில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளது.

கிறிஸ் கெய்ல் போன்ற வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திரங்கள் பங்குபெறும் இந்த தொடர் வெற்றி அடையும் பட்சத்தில் அடுத்த வருடம் விரிவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் டி10 அதாவது 10 ஓவர்கள் கொண்ட தொடரை போன்றது என்றாலும் அதிலிருந்து வித்தியாசமாக இருக்கும் வகையில் நிறைய புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகள் இதோ:

  1. ஒவ்வொரு அணியின் பேட்டிங்கில் 10 விக்கெட்டுக்கு பதில் 6 விக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  2. 10 ஓவர்களில் முதல் 2 ஓவர்கள் பவர்பிளே ஓவர்களாக இருக்கும்.
  3. அந்த பவர்பிளே ஓவர்களில் அதாவது முதல் 12 பந்துகளில் குறைந்தது 2 சிக்சர்கள் அடித்தால் 3-வது பவர்பிளே பூட்டு திறக்கப்பட்டு எக்ஸ்ட்ராவாக ஒரு பவர்பிளே ஓவர் கொடுக்கப்படும்.
  4. அதேபோல் ஒரு பவுலர் 2 ஓவர்களுக்கு மேல் பந்துவீச அனுமதிக்கப்படமாட்டாது.
  5. பந்து வீசும் அணி ஒவ்வொரு ஓவருக்கும் பெவிலியன் எண்டை மாற்றாமல் 5 ஓவர்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம்.
  6. 45 நிமிடத்திற்குள் பந்துவீசும் அணி 60 பந்துகளை வீசி முடிக்காவிட்டால் எஞ்சிய நிமிடங்களில் வீசும் ஓவர்களுக்கு உள் வட்டத்துக்கு வெளியே அனுமதிக்கப்படும் பீல்டர்களில் ஒருவர் குறைத்துக் கொள்ளப்படுவார்கள்.
  7. போட்டியின் எந்த தருணத்திலும் கிடைக்கக்கூடிய பிரீ ஹிட்டை எப்போது கொடுக்கலாம் என்பதை ரசிகர்கள் அதற்கான மொபைல் ஆப் அல்லது இணையம் வாயிலாக தேர்வு செய்வார்கள்.
Advertisement