இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையினை ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்த வேளையில் இந்த தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக தற்போதே இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான பத்து அணிகளில் ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களில் இருந்த இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அவர்களை தவிர்த்து மற்ற இரண்டு இடங்களுக்கு தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, அயர்லாந்து, இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், யு.ஏ.இ, நேபாளம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த 10 அணிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வாகும். இந்நிலையில் இரண்டு முறை 50 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற ஜாம்பவான் அணியான வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை உலகக் கோப்பை தேர்வாகாமல் அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் ஏற்கனவே ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையே தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நேற்று ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 43.5 ஓவர்களில் 181 ரன்கள் மட்டுமே குவித்தது.
பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஸ்காட்லாந்து 43.3 ஓவர்களில் 185 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பினை முற்றிலும் இழந்து விட்டு இந்த உலககோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
இதையும் படிங்க : வீடியோ : நாட்டுக்காக ஒத்த காலில் விளையாடிய நேதன் லயன் – அரிப்பணிப்பை எழுந்து பாராட்டிய லார்ட்ஸ் ரசிகர்கள்
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான்கள் நிறைந்த அணியாக பார்க்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை 50 உலகக் கோப்பையும், இரண்டு முறை டி20 உலக கோப்பையும் கைப்பற்றி இருந்த வேளையில் இந்த ஆண்டு அவர்கள் தகுதிச்சுற்று போட்டிகளில் கூட வெற்றி பெறாதது அந்த அணிக்கு ஏற்பட்ட பெரிய அவமானம் என்று கூறலாம்.