20 ரன்ஸ் 7 விக்கெட்ஸ்.. இந்தியாவிடம் செய்த அதே தவறு.. தெ.ஆ கையில் வைத்திருந்த வெற்றியை பறித்த வெ.இ

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 0 (2) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்று பதிலடி கொடுத்தது. அந்த நிலையில் அத்தொடரின் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 26ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 41 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அலிக் அதனேஷ் 28 (21) ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய சாய் ஹோப் 2 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 41 (22) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

பறித்த வெஸ்ட் இண்டீஸ்:

ஆனால் கடந்த போட்டியின் நாயகன் நிக்கோலஸ் பூரான் தடுமாற்றமாக விளையாடி 19 (19) ரன்களிலும் ராஸ்டன் சேஸ் 7 (9) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோவ்மன் போவல் 35 (22), ஷெர்பான் ரூத்தர்போர்டு 29 (18), செபார்ட் 9* (6) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 179/6 ரன்கள் குவித்தது.

தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லிசாட் வில்லியம்ஸ் 3, பட்ரிக் க்ருகர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 180 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா அணிக்கு 63 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த ரியான் ரிக்கல்டன் 20 (13) ரன்களும் ரீசா ஹென்றிக்ஸ் அதிரடியாக 44 (18) ரன்களும் விளாசி அவுட்டானார்கள். இருப்பினும் அவர்களை தொடர்ந்து கேப்டன் ஐடன் மார்க்கம் அதிரடியாக விளையாட முயற்சித்து 19 (9) ரன்களிலும் ட்ரிஷன் ஸ்டப்ஸ் 28 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஹாட்ரிக் வெற்றி:

அதைப் பயன்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வேன் டெர் டுஷன் 17, பெராரியா 4, பட்ரிக் க்ருகர் 6 என அடுத்து வந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்தனர். இறுதியில் 19.4 ஓவரில் தென்னாப்பிரிக்காவை 149 ரன்களுக்கு சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சமர் ஜோசப் 3, ரொமானியா செப்பார்ட் 2, அகில் ஹொசைன் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

குறிப்பாக 129/3 என்ற நல்ல நிலையில் தென்னாபிரிக்கா கையில் வைத்திருந்த வெற்றியை மேற்கொண்டு 20 ரன்கள் மட்டுமே கொடுத்த 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் பறித்தது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்ற வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்காக தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: இதைவிட மட்டமான ஆட்டம் இருக்கவே இருக்காது.. பாகிஸ்தான் வீரர்களை வறுத்தெடுத்த கம்ரான் அக்மல் – விவரம் இதோ

அத்துடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 3 டி20 தொடர்களிலும் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. மறுபுறம் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவுக்கு எதிராக நல்ல துவக்கத்தை பெற்றும் கடைசியில் ஃபினிஷிங் செய்யாமல் தோற்றதை போலவே இப்போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வீழ்ந்தது.

Advertisement