IND vs WI : சரவெடியாக அடித்த பூரானையும் தாண்டி கொண்டு வந்த அசாத்திய வெற்றியை – கடைசியில் இந்தியா கோட்டை விட்டது எப்படி?

Ravi Bisnoi Nicholas Pooran IND vs WI
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 3வது ஓவரிலேயே சுப்மன் கில் தடுமாறி 7 (9) ரன்னில் அவுட்டாக அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 1 (3) ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதனால் 18/2 என தடுமாறிய இந்தியாவை காப்பாற்ற முயற்சித்த இஷான் கிசான் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 27 (23) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்த சில ஓவர்களில் எதிர்ப்புறம் தடுமாறிய சஞ்சு சாம்சனும் 7 (7) ரன்னில் ஆட்டமிழந்து பெரிய பின்னடைவை கொடுத்தார். அந்த சூழ்நிலையில் சவாலான பிட்ச்சில் மீண்டும் அனுபவமிக்கவரை போல் அட்டகாசமாக பேட்டிங் செய்த திலக் வர்மா 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதமடித்து 51 (41) ரன்கள் குவித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

போராடி தோல்வி:
இறுதியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸருடன் 24 (18) ரன்களும் அக்ஸர் படேல் 14 (12) ரன்களும் ரவி பிஷ்னோய் 8* (4) அர்ஷிதீப் சிங் 6* (3) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் இந்தியா 152/7 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்ட், அல்சாரி ஜோசப், அகில் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 153 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ்க்கு முதல் பந்திலேயே ப்ரெண்டன் கிங்கை கோல்டன் டக் அவுட்டாக்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அடுத்த சில பந்துகளில் அடுத்தாக வந்த ஜான்சன் சார்லஸையும் 2 (3) ரன்னில் காலி செய்தார். அதே போல மறுபுறம் 2 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு அதிரடியாக விளையாட முயற்சித்த கெய்ல் மேயர்ஸ் 15 (7) ரன்களில் அர்ஷிதீப் வேகத்தில் அவுட்டானதால் 32/3 என வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே தடுமாறியது.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் தமக்கே உரித்தான ஸ்டைலில் இந்திய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் முரட்டுத்தனமாக அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக சமீபத்திய டி20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கி அரை சதமடித்த நிலையில் எதிர்புறம் 4வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த கேப்டன் ரோவ்மன் போவலை 21 (19) ரன்களில் மீண்டும் பாண்டியா அவுட்டாக்கினார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய நிக்கோலஸ் பூரான் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 67 (40) ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அப்போது கடைசி 42 பந்துகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 27 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியாவின் வெற்றி பறிபோனதாக பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் மனம் தளராமல் போராடிய இந்தியாவுக்கு 15வது ஓவரின் முதல் பந்தில் ரொமாரியா செபாஃர்டை சிங்கிள் எடுக்க முயற்சித்த போது அக்சர் பட்டேல் துல்லியமாக ரன் அவுட்டாக்கி 0 ரன்களில் பெவிலியன் திருப்பினார்.

- Advertisement -

அதை விட அந்த ஓவர் வீசிய யுஸ்வேந்திர சஹால் மறுபுறம் வெற்றியை பறிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மயரை 4வது பந்தில் 22 (22) ரன்களில் அவுட்டாக்கி கடைசி பந்தில் ஜேசன் ஹோல்டரையும் டக் அவுட்டாக்கி போட்டியில் பெரிய திருப்பு முனையை உண்டாக்கினார். அப்படி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இந்தியா வீழ்த்தியதால் திடீரென வெஸ்ட் இண்டீஸ் 129/8 என சரிந்தது. ஆனாலும் அப்போது வந்த அகில் ஹொசைன் அர்ஷ்தீப் வீசிய 18வது ஓவரில் 1 பவுண்டரியும் முகேஷ் குமார் வீசிய அடுத்த ஓவரில் 1 பவுண்டரியும் அடித்து 16* (10) ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க:IND vs WI : மீண்டும் போராடி இந்தியாவை காப்பாற்றிய திலக் வர்மா – சூரியகுமாரையே மிஞ்சி சாதனையுடன் கேரியரை அபார துவக்கம்

அவருடன் அல்சாரி ஜோசப் தனது பங்கிற்கு 10* (8) ரன்கள் எடுத்ததால் 18.5 ஓவரிலேயே 155 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று 2 – 0* (5) என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா 20 ரன்கள் எடுக்க தவறிய இந்தியாவுக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 3 விக்கெட்டுகளும் சஹால் 2 விக்கெட்களும் எடுத்தும் டெத் ஓவர்களில் சொதப்பி மீண்டும் தோல்வியை சந்தித்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Advertisement