325 ரன்ஸ்.. இங்கிலாந்தை ஓடவிட்டு பவரை காட்டிய ஷாய் ஹோப்.. வெ.இ வெற்றி பாதைக்கு திரும்பியது எப்படி?

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய போதிலும் கோப்பையை தக்க வைக்க முடியாமல் வெளியேறிய இங்கிலாந்து அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஆன்டிகுவாவில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய போதிலும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு ஹரி ப்ரூக் அதிகபட்சமாக 71 (72) ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் பில் சால்ட் 45, வில் ஜேக்ஸ் 26, ஜாக் கிராவ்லி 48, சாம் கரண் 38 (26) என இதர முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர்.

- Advertisement -

திரும்பிய வெஸ்ட் இண்டீஸ்:
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஒசினோ தாமஸ், குடகேஷ் மோட்டி, ரொமாரியா செப்பார்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதை தொடர்ந்து 326 என்ற கடினமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 104 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த அலிக் அதனேஷ் 66 (65) ரன்கள் எடுத்து அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் மற்றொரு துவக்க வீரர் ப்ரண்டன் கிங் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து வந்த கேசி கார்ட்டி 16 ரன்களில் பெவிலியன் திரும்பினாலும் மிடில் ஆர்டரில் கேப்டன் ஷாய் ஹோப் ஆரம்பம் முதலே நிதானம் கலந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நட்சத்திர வீரர் சிம்ரோன் ஹெட்மயர் தம்முடைய பங்கிற்கு 32 (30) ரன்கள் எடுத்து அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த ரூட்டர்ஃபோர்ட் 6 ரன்களில் அவுட்டானாலும் அடுத்ததாக வந்த ரொமாரியா செபார்ட் டெத் ஓவரில் அதிரடியாக 4 பவுண்டரி 3 சிக்சருடன் 49 (28) ரன்கள் அடித்து இங்கிலாந்தின் வெற்றியை பறித்தார்.

- Advertisement -

ஏனெனில் அதை வீணடிக்காமல் எதிர்புறம் தொடர்ந்து கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் ஹோப் 4 பவுண்டரை 7 சிக்ஸருடன் சதமடித்து 109* (83) ரன்கள் குவித்தார். அதனால் 48.5 ஓவரில் 326/6 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக 1975, 1979 சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் வரலாற்றில் முதல் முறையாக தேர்வாகாமல் வெளியேறியது மொத்த ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.

இதையும் படிங்க: கடைசி ஓவரை வீசும் முன்னர் சூரியகுமார் யாதவ் என்கிட்ட சொன்னாது இதுதான் – அர்ஷ்தீப் சிங் அளித்த பேட்டி

அந்த நிலைமையில் தடுமாற்றமாக வந்துள்ள இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய அந்த அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மறுபுறம் உலகக் கோப்பை தோல்வியிலிருந்து இன்னும் மீளாத இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கஸ் அட்கிட்சன், ரீகன் அகமது தலா 2 விக்கெட் எடுத்தும் இப்போட்டியில் வெற்றி காண முடியவில்லை.

Advertisement