4, 6, 6, 6, 6.. ஒரே ஓவரில் 28 ரன்ஸ் வெளுத்த போவல்.. 63/4 டூ 176/7.. இங்கிலாந்தை வீழ்த்திய வெ.இ முன்னிலை

- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் சுமாராக விளையாடி 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. மறுபுறம் 2023 உலகக் கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வீழ்ச்சியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் வலுவான இங்கிலாந்தை தோற்கடித்து கம்பேக் கொடுத்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடுகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில் 2வது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு கிரேனடா நகரில் நடைபெற்றது.

- Advertisement -

திண்டாடும் இங்கிலாந்து:
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 176/7 ரன்கள் சேர்த்தது. சொல்லப்போனால் அந்த அணிக்கு ப்ரெண்டன் கிங் அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் கெய்ல் மேயர்ஸ் 17, நிக்கோலஸ் பூரான் 5, ஷாய் ஹோப் 1, ஹெட்மேயர் 2 என நட்சத்திர வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 63/4 என சரிந்த வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்கள் கூட தாண்டாத என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அடுத்ததாக வந்த ரோவ்மன் போவல் 178.58 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக 50 (28) ரன்கள் விளாசி காப்பாற்றினார். குறிப்பாக சாம் கரண் வீசிய 16வது ஓவரில் 4, 6, 6, 6, 6 என முதல் 5 பந்துகளில் 28 ரன்களை விளாசிய அவர் போட்டியில் பெரிய திருப்புமுனையை உண்டாக்கி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய ப்ரெண்டன் கிங் கடைசி வரை அவுட்டாகாமல் 8 பவுண்டரி 5 சிக்ஸருடன் 82* (52) ரன்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸ் அணியை முழுமையாக காப்பாற்றிய நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அடில் ரசித், டைமல் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து 177 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு பில் சால்ட் 15, கேப்டன் ஜோஸ் பட்லர் 5, வில் ஜேக்ஸ் 14, லிவிங்ஸ்டன் 17, ஹரி ப்ரூக் 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

இதையும் படிங்க: விருது வாங்குன பிளேயரை ட்ராப் பண்ற பரிதாபம் நம்ம டீம்’ல தான் நடக்கும்.. இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்த கம்பீர்

அதனால் சாம் கரண் 50 (32), மொய்ன் அலி 22* (13) ரன்கள் எடுத்துப் போராடியும் 20 ஓவர்களில் இங்கிலாந்தை 166/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று 2 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்று இத்தொடரை வெல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 3, அகில் ஹொசைன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். மறுபுறம் 2022 டி20 உலகக் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து இத்தொடரிலும் திண்டாடி வருவது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Advertisement