வெறும் 8 ரன்ஸ்.. சாம்பியன் ஆஸியை தெறிக்கவிட்ட வெ.இ.. இந்தியா போல 35 வருடத்துக்கு பின் சரித்திர வெற்றி

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் முக்கியமான 2வது போட்டி ஜனவரி 25ஆம் தேதி பிரிஸ்பேன் இருக்கும் புகழ் பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து கடுமையாக போராடி 311 ரன்கள் எடுத்தது.

குறிப்பாக கேப்டன் ப்ரத்வெய்ட் 4, சந்தர்பால் 21, மெக்கன்சி 21, அதனேஷ் 8, ஜஸ்டின் க்ரீவ்ஸ் 6 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 64/5 என திணறிய வெஸ்ட் இண்டீஸ் 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோஸ்வா டா சில்வா 79, கேவம் ஹோட்ஜ் 71, கெவின் சின்க்ளைர் 50 ரன்கள் அடித்து காப்பாற்றினார்கள்.

- Advertisement -

மாஸ் வெற்றி:
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஸ்மித் 6, லபுஸ்ஷேன் 3, கேமரூன் கிரீன் 8, டிராவிஸ் ஹெட் 0 என முக்கிய வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி வெஸ்ட் இண்டீஸ் தெறிக்க விட்டது. அதனால் 24/4 என திணறிய ஆஸ்திரேலியாவை உஸ்மான் கவாஜா 75, அலெக்ஸ் கேரி 65, கேப்டன் பட் கமின்ஸ் 64* ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினர்.

அதனால் 289/9 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா திடீரென தங்களுடைய இன்னிங்ஸை 22 ரன்கள் பின்தங்கியிருந்தும் தைரியமாக டிக்ளேர் செய்வதாக அறிவித்து ஆச்சரியத்தை கொடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 4, கிமர் ரோச் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அதிகபட்சமாக கிரிக் மெக்கன்சி 41, அலிக் அதனேஷ் 35, க்ரீவ்ஸ் 33 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 3, நேதன் லயன் 3 விக்கெட்களை சாய்த்தனர். இறுதியில் 216 என்ற இலக்கை துரத்தி ஆஸ்திரேலியாவுக்கு ஒருபுறம் ஸ்டீவ் ஸ்மித் நங்கூரமாக விளையாடிய போதிலும் கவாஜா 10, லபுஸ்ஷேன் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதை விட எதிர்ப்புறம் போராடிய கேமரூன் கிரீனை 42 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய சமர் ஜோசப் அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் 0, மிட்சேல் மார்ஷ் 10, அலெக்ஸ் கேரி 2, மிட்சேல் ஸ்டார்க் 21 ரன்களில் அவுட்டாக்கினார். இறுதியில் ஸ்டீவ் ஸ்மித் தனி ஒருவனாக 91* ரன்கள் எடுத்த போதிலும் எதிர்ப்புறம் வந்த வீரர்களை காலி செய்த வெஸ்ட் இண்டீஸ் 207 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டி வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் பெற்றது.

இதையும் படிங்க: 230 ரன்ஸ்.. சிம்ம சொப்பனமாக செயல்பட்ட போப்.. இந்திய மண்ணில் மாபெரும் சாதனை.. இங்கிலாந்து சவாலான இலக்கு

இதன் வாயிலாக டெஸ்ட் சாம்பியனாகவும் உலகின் நம்பர் ஒன் அணியாகவும் திகழும் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் 30 வருடங்கள் கழித்து தோற்கடித்து வெஸ்ட் இண்டீஸ் சாதனை படைத்தது. குறிப்பாக 1988க்குப்பின் ஆஸ்திரேலியாவை அதனுடைய கோட்டையான காபா மைதானத்தில் தோற்கடித்து வெஸ்ட் இண்டீஸ் சரித்திரம் படைத்தது. மேலும் கடந்த 35 வருடங்களில் இந்தியாவுக்கு பின் காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இரண்டாவது அணி என்ற பெருமையும் வெஸ்ட் இண்டீஸ் பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சமர் ஜோசப் 7 விக்கெட்டுகள் சாய்த்து 1 – 1 (2) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்ய உதவி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

Advertisement