வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வென்று அசத்தியது. குறிப்பாக நேற்று முன்தினம் பார்படாஸ் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது.
ஆனால் அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது அப்போட்டியில் 10-1 என்ற நிலையில் இங்கிலாந்து விளையாடிக் கொண்டிருந்த போது அல்சாரி ஜோசப் பந்து வீசினார். அப்போது தமக்கு தகுந்தார் போல் ஒரு ஃபீல்டிங்கை செட்டிங் செய்யுமாறு அவர் கேப்டன் சாய் ஹோப்பிடம் கேட்டுக் கொண்டார்.
அதிரடி தடை:
ஆனால் அந்த சூழ்நிலைக்கு அல்சாரி ஜோசப் கேட்கும் ஃபீல்டிங் தேவையில்லை என்று கருதிய சாய் ஹோப் தாம் ஏற்கனவே வைத்திருந்ததை தொடர்ந்தார். அதனால் அதிருப்தியடைந்த அல்சாரி ஜோசப் அடுத்த பந்திலேயே இங்கிலாந்து வீரர் ஜோர்டான் கோக்ஸை அவுட்டாக்கினார். இறுதியில் அந்த ஓவரை வீசி முடித்த அவர் கேப்டன் ஷாய் ஹோப்பிடம் “நான் கேட்கும் ஃபீல்டிங்கை செட்டிங் செய்ய மாட்டீர்களா?” என்ற வகையில் கையை நீட்டி கோபத்துடன் பேசினார்.
பின்னர் வேகமாக களத்தில் இருந்து வெளியேறிய அவர் பெவிலியனில் சென்று அமர்ந்து கொண்டார். மறுபுறம் அவரை சமாதானப்படுத்தி அழைக்காத ஷாய் ஹோப் 10 வீரர்களுடன் அடுத்த ஓவரை வீசி முடித்தார். பின்னர் பயிற்சியாளர் டேரன் சமி சமாதானப்படுத்தியதால் மீண்டும் அல்சாரி ஜோசப் களத்திற்கு வந்ததை தொடர்ந்து போட்டி நடைபெற்று முடிந்தது.
மன்னிப்பு கேட்பு:
இந்நிலையில் களத்தில் விதிமுறைகளை மீறி கேப்டனின் சொற்களை கேட்காமல் செயல்பட்ட அல்சாரி ஜோசப்புக்கு அடுத்த 2 சர்வதேச போட்டிகளில் தடை விதிப்பதாக வெஸ்ட் இண்டீஸ் வாரியம் அறிவித்துள்ளது. பயிற்சியாளருடன் இணைந்து விவாதித்த பின் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் வாரியம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: ருதுராஜ் கெய்க்வாடுக்கு டி20 அணியில் இடம் கிடைக்காததற்கு காரணம் என்ன? – சூரியகுமார் கொடுத்த விளக்கம்
அதை ஏற்றுக்கொண்ட அல்சாரி ஜோசப் அப்போட்டியில் இருந்த ஈடுபாடு காரணமாக தம்மை அறியாமலேயே அப்படி நடந்து கொண்டதாக கூறியுள்ளார். அவ்வாறு நடந்து கொண்டதற்காக வெஸ்ட் இண்டீஸ் வாரியம், கேப்டன் ஹோப், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அல்சாரி ஜோசப் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த நடைபெறும் டி20 தொடரின் முதல் 2 போட்டியில் அவர் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.