ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 17ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரசாந்த் வீரர், கார்த்திக் சர்மாவை 28.40 கோடிகள் கொடுத்து வாங்கியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஏனெனில் அவர்கள் இருவருமே சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை.
இருப்பினும் கடந்த வருடம் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. மேலும் அந்த அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ருதுராஜ் தலைமையில் வருங்காலத்திற்கு தேவையான புதிய அணியை உருவாக்குவதற்காகவே சிஎஸ்கே இளம் வீரர்களை வாங்கியுள்ளது என்று சொல்லலாம்.
14.20 கோடிக்கு ஒர்த்தான கார்த்திக்:
குறிப்பாக ராஜஸ்தானை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கார்த்திக் சர்மா உள்ளூரில் அதிரடியாக விளையாடி வருகிறார். கடந்த 2024 ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே உத்தரகாண்டிற்கு எதிராக 6வது இடத்தில் களமிறங்கி சதமடித்து 113 ரன்கள் குவித்தார். குறிப்பாக 11 பவுண்டரி 6 சிக்ஸரை அடித்த அவர் அறிமுக ரஞ்சிப் போட்டியிலேயே 98.26 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார்.
அதே போல 2024 விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் மகாராஷ்டிராவுக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலும் சதமடித்த கார்த்திக் 123 (90) ரன்கள் குவித்தார். அன்றைய போட்டியில் 7 பவுண்டரி 11 சிக்ஸரை அடித்த அவர் 136.66 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2024 சயீத் முஸ்டாக் அலி டி20 கோப்பையில் அறிமுகமான அவர் 2 சிக்ஸருடன் 23 (18) ரன்கள் அடித்தார்.
தோனியின் இடத்துக்கு பிளான்:
இதுவரை 12 உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 11 இன்னிங்ஸில் 334 ரன்களை 162.92 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார். அந்த 11 இன்னிங்ஸில் 16 பவுண்டரிகள் மட்டுமே அடித்துள்ள கார்த்திக் 28 சிக்சர்கள் அடித்துள்ளார் என்பது சிறப்பம்சமாகும். மேலும் ரஞ்சிக்கோப்பையில் 11 இன்னிங்ஸில் 24, விஜய் ஹசாரே கோப்பையில் 9 இன்னிங்ஸில் 26 சிக்ஸர்கள் அடித்துள்ள அவர் அறிமுகப் போட்டிகளிலேயே சதத்தையும் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: 28.40 கோடி.. வேணும்னே விலையை ஏத்தி விட்டு சிஎஸ்கே அணிக்கு நஷ்டத்தை கொடுத்த காவ்யா மாறன்
அப்படி மொத்தமாக 30 இன்னிங்சில் 78 சிக்ஸ் அடித்துள்ள 19 வயதாகும் அவரை 14.20 கோடிகள் என்ற பெரிய தொகையை சிஎஸ்கே அணி சும்மா வாங்கவில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக ஜாம்பவான் எம்.எஸ். தோனி போல விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் அதிரடியாக சிக்ஸர்களை அடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. எனவே வருங்காலங்களில் தோனியின் இடத்தை நிரப்பும் நோக்கத்தில் அவரை சிஎஸ்கே அணி திட்டமிட்டு வாங்கியுள்ளது என்றால் மிகையாகாது.



