கடந்த மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது முதல் வாரத்தை வெற்றிகரமாக நெருங்கியுள்ளது. இந்த தொடரின் அடுத்தடுத்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் வேளையில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது தங்களது முதல் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து விளையாடியது.
நடராஜன் கம்பேக் எப்போது? : வெளியான தகவல்
இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதி ஓவரின் போது ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த ஆண்டு சன் ரைசர்ஸ் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது 10 கோடியே 75 லட்ச ரூபாய் என்கிற பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்திருந்தது. இதன் காரணமாக மிட்சல் ஸ்டார்க்குடன் இணைந்து அவரே பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டியில் நடராஜனுக்கு இடம் கிடைக்கவில்லை.
ஸ்டார்க்குடன் இணைந்து முகேஷ் குமார், மோகித் சர்மா ஆகியோரே வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றனர். இதன் காரணமாக நடராஜனுக்கு என்ன ஆனது? அவர் எப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுவார்? என்பது குறித்த கேள்வியும் அதிகளவு எழுந்துள்ளது. அந்த வகையில் பார்க்கையில் நடராஜன் கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எல் டி20 லீக் தொடரில் பங்கேற்று விளையாடினார்.
அப்போது ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக அதிலிருந்து இதுவரை எவ்வித டொமஸ்டிக் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இடையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரையும் அவர் காயம் காரணமாக தவறவிட்டார். இதனால் இந்த ஐபிஎல் தொடர் அவரது கம்பேக்கிற்கு சரியான நேரம் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரின் முதல் போட்டியிலும் அவர் டெல்லி அணிக்காக இடம் பெறவில்லை.
இதையும் படிங்க : கடைசி ஓவர் வரை எனக்கு அந்த நம்பிக்கை இருந்தது.. தனது மிரட்டல் ஆட்டம் குறித்து – அஷுதோஷ் சர்மா பேட்டி
ஆனாலும் நடராஜன் தற்போது காயத்திலிருந்து மெல்ல மெல்ல முன்னேறி வருவதால் நிச்சயம் இந்த தொடரின் ஒரு சில போட்டிகளை அவர் தவறவிட்டாலும் கூடிய விரைவில் அதாவது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் எல்லாம் போட்டியில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியை எட்டுவார் என்று கூறப்படுகிறது.



