
வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியை சந்தித்தது. அடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்த வெற்றிகள் பெற்றது. அதனால் ஆரம்பத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்று வங்கதேசத்துக்கு தக்க பதிலடி கொடுத்தது.
அந்த சூழ்நிலையில் சம்பிரதாய கடைசிப் போட்டி அக்டோபர் 31ஆம் தேதி சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 151 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தன்ஜிட் ஹசன் 89, சாய்ப் ஹசன் 23 ரன்கள் எடுத்தார்கள். மற்ற 9 வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டை இழந்தனர்.
குறிப்பாக 18வது ஓவரை வீசிய ரொமாரியா ஃசெபார்ட் கடைசி பந்தில் ஜாகிர் அலியை 5 ரன்னில் அவுட்டாக்கினார். அடுத்ததாக 20வது ஓரை வீசிய அவர் முதல் பந்தில் வங்கதேசத்துக்காக போராடிய தன்ஜிட் ஹசனை 89 ரன்களில் காலி செய்தார். அதோடு நிற்காத அவர் அடுத்த பந்தில் சோரிஃபுல் இஸ்லாமை 0 ரன்னில் கிளீன் போல்ட்டாக்கி 3 தொடர்ச்சியான பந்துகளில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜேசன் ஹோல்டருக்கு பின் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 2வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை செஃபார்ட் படைத்தார். அவருடன் ஜேசன் ஹோல்டர், காரி பெரி தலா 2 விக்கெட்டுகள் எடுத்து வங்கதேசத்தை சுருட்ட உதவினர். அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக பேட்டிங் செய்து 16.5 ஓவரில் 152/5 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ரோஸ்டன் சேஸ் 50 (29), ஆக்கிம் ஆகஸ்ட்டி 50 (25), அமீர் ஜங்கோ 34 (23) ரன்கள் அடித்து வெஸ்ட் இண்டீஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள். அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை ஒயிட்வாஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இதன் வாயிலாக முதல் முறையாக வெளிநாட்டில் நடைபெற்ற ஒரு டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி ஒயிட்வாஸ் செய்து வென்றுள்ளது.
இதையும் படிங்க: தோனி போல வருண் சக்ரவர்த்தியை அடிக்க.. விரித்த வலையில் தாமே விழுந்த டிம் டேவிட்.. நடந்தது என்ன?
இதற்கு முன் அந்த அணி வெளிநாட்டு மண்ணில் ஒரு டி20 தொடரை கூட ஒயிட்வாஸ் செய்து வென்றதில்லை. அப்படிப்பட்ட வரலாற்று வெற்றியை ரோஸ்டன் சேஸ் தலைமையிலான இளம் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றுள்ளது. மறுபுறம் ரிஷாத் ஹொசைன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தும் வங்கதேசம் சொந்த மண்ணில் பரிதாபமாக தோற்றது.