மைதானத்திலேயே சுருண்டு விழுந்த வீராங்கனை! ஆம்புலன்சில் ஏற்றிச்செல்லப்பட்டார் – என்ன நடந்தது?

West Indies Women's Shamilia Connell
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டில் கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று துவங்கிய ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் மிகுந்த பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று, நாக் அவுட் சுற்று என 2 வகையான சுற்றுகளை கொண்ட இந்த உலக கோப்பையில் உலகின் டாப் 8 அணிகள் 31 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த உலக கோப்பையில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

கலக்கல் வெஸ்ட் இண்டீஸ்:
இந்த உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் மகளிரணி பங்கேற்ற முதல் 4 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்திருந்தது. குறிப்பாக தனது முதல் போட்டியில் இந்த உலகக் கோப்பையை நடத்தும் பலம்வாய்ந்த நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது.

- Advertisement -

அதன்பின் நடப்பு சாம்பியனாக இருக்கும் வலுவான இங்கிலாந்து அணியையும் பதம் பார்த்த அந்த அணி வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு திரில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இன்று பங்கேற்ற தனது 5வது லீக் போட்டியில் வங்கதேசத்தை அந்த அணி எதிர்கொண்டது. மௌன்ட் மௌங்கனி நகரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தின் சிறப்பான பந்து வீச்சில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து வெறும் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக விக்கெட் கீப்பர் கேம்பெல்லே 53 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட்இண்டீஸ் த்ரில் வெற்றி:
அதை தொடர்ந்து 141 என்ற மிகவும் சுலபமான இலக்கை துரத்திய வங்கதேச வீராங்கனைகள் ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் சுல்தானா 25 ரன்கள் எடுத்தபோது 60/2 என்ற நிலையில் இருந்த அந்த அணி ஓரளவு வெற்றியை உறுதி செய்தது. ஆனால் அதன்பின் வந்த 3 வீராங்கனைகளை அடுத்தடுத்து அவுட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்து போட்டியை தன் பக்கம் திருப்பியது.

- Advertisement -

அதன் காரணமாக திடீரெனெ 60/5 என சரிந்த வெஸ்ட் இண்டீஸ் அதிலிருந்து கடைசி வரை மீள முடியாமல் திண்டாடியது. குறிப்பாக பந்துகள் நிறைய கையில் இருந்த போதிலும் விக்கெட்டுகளை கோட்டைவிட்ட அந்த அணியின் கடைசி விக்கெட்டுக்கு 27 பந்துகள் மீதம் இருந்த நிலையில் வெற்றிக்கு வெறும் 19 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அதைக் கூட எடுக்க முடியாத வங்கதேசம் 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடைசி கட்ட பரபரப்பான ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ்க்கு பரிசாக மீண்டும் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி கிடைத்தது.

சுருண்டு விழுந்த வீராங்கனை:
முன்னதாக இந்த போட்டிகள் கடைசிகட்ட பரபரப்பான நேரத்தில் அதாவது வங்கதேச அணி 47-வது ஓவரில் சேசிங் செய்து கொண்டிருந்தபோது மிட் விக்கெட் திசையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீராங்கனை ஷமிலா கானெல் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அந்த பரபரப்பான நேரத்தில் அனைவரும் போட்டியை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போது முதலில் லேசான வயிற்று வலியை உணர்ந்த அவர் அடுத்த ஒரு சில நிமிடங்களில் மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

- Advertisement -

இதனால் பதறிப்போன இதர வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் உடனடியாக அங்கே சென்று அவருக்கு என்ன ஆயிற்று என பார்த்தனர். நல்லவேளையாக லேசான மயக்கம் மட்டுமே அடைந்த அவர் இதர வீராங்கனைகளின் எழுந்து நின்ற போதிலும் நடக்க முடியாமல் தவித்தார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய மற்றொரு நட்சத்திர வெளிநாட்டு வீரர் – சிக்கலில் அணி (எந்த அணி?)

அதன் காரணமாக மைதானத்தில் இருந்த அனைவரும் பதறி போன நிலையில் மைதானத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆம்புலன்சை உடனடியாக வருமாறு அம்பயர் சிக்னல் கொடுத்தார். அதை அடுத்து மைதானத்திற்குள் நேரடியாக வந்த ஆம்புலன்ஸ் அவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று பத்திரமாக சேர்த்தது. இருப்பினும் அவருக்கு என்ன நடந்தது அவர் எப்படி உள்ளார் என்பது பற்றி இன்னும் தெரியவரவில்லை என்று போட்டி முடிந்த பின் ஆட்டநாயகி விருது வென்ற ஹெய்லே மேத்தியூஸ் தெரிவித்தார்.

இந்த வேளையில் அவரின் ஆரோக்கியம் பற்றிய அறிவிப்பு மற்றும் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது போன்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லைவ் கிரிக்கெட் போட்டியில் ஒரு வீராங்கனை இப்படி மயங்கி விழுந்து ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றதை பார்த்த ரசிகர்கள் அவர் நல்லபடியாக குணமடைந்து மீண்டும் விளையாட வேண்டும் என பிராத்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement