நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 2ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 231 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 52, மைக்கேல் பிரேஸ்வெல் 47 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜஸ்டின் கிரிவ்ஸ், ஓஜய் சீல்ட்ஸ், கிமர் ரோச், ஜெய்டேன் சீல்ஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸை சிறப்பாக பந்து வீசிய நியூஸிலாந்து வெறும் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.
அசத்திய வெ.இ:
அதிகபட்சமாக தக்நரேன் சந்தர்பால் 52, சாய் ஹோப் 56 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்துக்கு ஜேக்கப் டுபி 5, ஜகாரி போல்க்ஸ் 2, மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக 64 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 466/8 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் டாம் லாதம் 145, ரச்சின் ரவீந்திரா 176 ரன்கள் சதத்தை அடித்து அசத்தினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக கிமர் ரோச் 5, ஓஜய் சீல்ட்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியாக 531 என்ற மெகா இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்தார் போல் ஜான் கேம்பல் 15, சந்தர்பால் 6, அலிக் அதனாஷ் 5, கேப்டன் ரோஸ்டன் சேஸ் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
தவறிய உலக சாதனை சேசிங்:
அதனால் 72/4 எனத் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மறுபுறம் சாய் ஹோப் நங்கூரமாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் தம்முடைய பங்கிற்கு நங்கூரத்தைப் போட்டு நியூசிலாந்துக்கு சவாலைக் கொடுத்தார். 4வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் சாய் ஹோப் சதமடித்து 140 ரன்கள் குவித்து ஃபெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த கெவின் இம்லாச் 4 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் அசத்திய க்ரீவ்ஸ் இரட்டை சதத்தை அடித்தார். அவருடன் கைகோர்த்த கிமர் ரோச் இரு மடங்கு நங்கூரமாக விளையாடி நியூசிலாந்தின் வெற்றியைத் தடுத்தார். குறிப்பாக ஒரு கட்டத்தில் 53 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காத அவர் நியூசிலாந்தின் வெற்றியை சுக்கு நூறாக உடைத்தார். தொடர்ந்து அசத்திய அவர் 238 பந்துகளில் அரை சதமடித்து 58* ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: டி20 போட்டிகளில் முதல் வீரராக மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – ஆண்ட்ரே ரசல்
மறுபுறம் இரட்டை சதமடித்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் 202* (388) ரன்கள் எடுத்த போது போட்டி ட்ராவில் முடிந்தது. டெஸ்ட் வரலாற்றில் எந்த அணியும் 420க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்தது கிடையாது. அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் 531 சேசிங்கில் 457/6 ரன்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் வெறும் 74 ரன்கள் வித்தியாசத்தில் உலக சாதனை சேசிங்கை தவற விட்டது. அந்த வகையில் தோல்வியிலிருந்து மீண்டெழுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்துக்கு பயத்தைக் காட்டியது எனலாம்.



