50 ஓவர்களும் ஸ்பின்.. வங்கதேசத்தில் போட்டுத் தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்.. 2 அரிய உலக சாதனை

WI vs BAN
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு வங்கதேசம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்ததாக வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 2வது போட்டி அக்டோபர் 21ஆம் தேதி வங்கதேசத்தில் இருக்கும் தாக்காவில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தாக்கா மைதானத்தின் பிட்ச் கருமண்ணால் உருவாக்கப்பட்டிருந்தது. அது போட்டி துவங்குவதற்கு முன்பாகவே நெல் நாற்றங்காலுக்கு தண்ணீர் விடாத சேற்றங்கால் போல வெடித்திருந்தது. அதைப் பார்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கே சுழல் பந்துகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்ததாக தெரிகிறது.

- Advertisement -

50 ஓவர்களும் ஸ்பின்:

அதை அடிப்படையாக வைத்து முதல் ஓவரிலிருந்தே வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின்னர்களை வைத்து பந்து வீசத் துவங்கியது. அதை எதிர்கொண்ட வங்கதேசத்துக்கு சாய்ப் ஹசன் 6, டௌஹித் ஹ்ரிடாய் 12, நஜ்முல் சாண்டோ 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். மறுபுறம் நிதானமாக விளையாடிய சௌமியா சர்க்கர் 45 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அப்போதும் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர்களை வீச வைக்காதது வர்ணனையாளர்கள் மற்றும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதைத்தொடர்ந்து எதிர்கொண்ட வங்கதேசத்துக்கு லோயர் ஆர்டரில் கேப்டன் மெகதி ஹசன் 32* ரன்கள் எடுத்தார். அவருடன் நசும் அகமது 4, நூருல் ஹசன் 23 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி நேரத்தில் ரிஷாத் ஹுசைன் அதிரடியாக 39* (14) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அரிய உலக சாதனை:

அதனால் 50 ஓவரில் வங்கதேசம் 213/7 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக அகில் ஹொசைன் 2, அலிக் அதனாஸ் 2, குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளை எடுத்தனர். மொத்தத்தில் கடைசி வரை வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தவில்லை. அந்த அணிக்கு அகில் ஹொசைன் 10, அலிக் அதனாஸ் 10, குடகேஷ் மோட்டி 10, ரோஸ்டன் சேஸ் 10, காரி பியர்ரே 10 என 50 ஓவர்களையும் 5 ஸ்பின்னர் வீசினார்கள்.

இதையும் படிங்க: நிச்சயமாக ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இதை செய்வாங்க.. அவங்க சாம்பியன்ஸ் – ரிக்கி பாண்டிங் கருத்து

இதன் வாயிலாக ஒரு ஒருநாள் போட்டியின் 50 ஓவர்களையும் சுழல் பந்துகளாக வீசிய முதல் அணி என்ற அரிய உலக சாதனையை வெஸ்ட் இண்டீஸ் நிகழ்த்தியுள்ளது. அத்துடன் ஒரு ஒருநாள் போட்டியில் அதிக ஓவர்களை சூழல் பந்துகளாக வீசிய அணி என்ற உலக சாதனையையும் வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது. இதற்கு முன் 1996, 1998, 2004 ஆகிய வருடங்களில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை 3 முறை தலா 44 ஓவர்களை சுழல் பந்துகளாக வீசியதே முந்தைய சாதனை.

Advertisement