ஐபிஎல் 2022 தொடரில் 7000க்கும் மேற்பட்ட கோடி ரூபாய் என்ற பிரம்மாண்ட செலவில் உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் இந்திய நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தலைமையில் முன்னாள் இந்திய நட்சத்திரம் கௌதம் கம்பீர் ஆலோசனையில் தனது முதல் சீசனில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே தடுமாற்றங்கள் இருந்தாலும் சீரான வெற்றிகளைப் பெற்ற அந்த அணி லீக் சுற்றில் மொத்தம் பங்கேற்ற 14 போட்டிகளில் 9 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்தது. இருப்பினும் அதே 9 வெற்றிகளைப் பெற்ற ராஜஸ்தான் தனது கடைசி போட்டியில் சென்னையை தோற்கடித்ததால் ரன்ரேட் அடிப்படையில் 2-வது இடத்தை பிடித்து குவாலிஃபயர் 1 போட்டிக்கு தகுதி பெற்று அதில் குஜராத்திடம் தோற்று குவாலிபயர் 2 போட்டியில் மே 27இல் விளையாட காத்திருக்கிறது.

அந்த வகையில் லக்னோவுக்கு நிச்சயமாக அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை என்ற நிலைமையில் 3-வது இடத்தை பிடித்த அந்த அணி மே 25இல் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் 4-வது இடத்தை பிடித்த பெங்களூருவிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் தனது முதல் சீசனிலேயே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தினாலும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்ட அந்த அணி பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது.
சொதப்பிய லக்னோ:
இதில் ஆச்சரியம் என்னவெனில் லீக் சுற்றில் அந்த அணி பதிவு செய்த 5 தோல்விகளுமே தற்போது பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் ராஜஸ்தான், குஜராத் மற்றும் பெங்களூரு ஆகிய எஞ்சிய 3 அணிகளுக்கு எதிராக வந்ததாகும். அந்த வகையில் லீக் சுற்றில் மீதி அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு 9 வெற்றிகளைப் பெற்றுவந்த அந்த அணி மீண்டும் நாக்-அவுட் சுற்றில் பெங்களூருவிடம் தோற்று வெளியேறியுள்ளது. இத்தனைக்கும் அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய அந்த அணி சுமாராக செயல்பட்டதால் 20 ஓவர்களில் பெங்களூரு 207/4 ரன்களை விளாசியது.

அதிகபட்சமாக 112* (54) ரன்களை விளாசிய ரஜத் படிடார் 70 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை தீபக் ஹூடாவும் 37* (23) ரன்கள் அடித்த தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை கேஎல் ராகுல் கோட்டை விட்டதால் அத்தோடு வெற்றியையும் அந்த அணி நழுவ விட்டது. இருப்பினும் 208 என்ற இலக்கை துரத்திய அந்த அணிக்கு அதே கேட்ச்சை விட்ட தீபக் ஹூடா அதிரடியாக 45 (26) ரன்களும் கேப்டன் கேஎல் ராகுல் நங்கூரமாக நின்று 79 (58) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் 20 ஓவர்களில் 193/6 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
என்ன ஒரு வெறி:
அந்த சேசிங்கில் 1 – 19 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த கேஎல் ராகுல் 79 (58) ரன்கள் எடுத்து போராடினாலும் அதிரடி காட்டாமல் கடைசி வரை 136.21 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் மெதுவாக பேட்டிங் செய்தது தோல்விக்கு முக்கிய பங்காற்றியதாக பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர். அதிலும் போட்டியும் முடிந்தபின் “இவ்வளவு மெதுவாகவா பேட்டிங் செய்வது” என்பது போல் கேஎல் ராகுலை கௌதம் கம்பீர் முறைக்க பார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் “எப்பா என்ன ஒரு கோபவெறி” என்று விதவிதமாக கலாய்க்கின்றனர்.
இருந்தாலும் தோல்வி என்பது சகஜம் என தெரிந்த அவர் “இன்றைய நாளில் அதிர்ஷ்டம் கடினமாக இருந்தது. ஆனாலும் எங்களின் புதிய அணிக்கு இது மிகச்சிறந்த தொடராக அமைந்தது. நாங்கள் கண்டிப்பாக வலுவாக திரும்பி வருவோம். அதுவரை மீண்டும் சந்திப்போம்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லக்னோ ரசிகர்களுக்கு தெம்பை கொடுத்து வீட்டுக்கு திரும்பினார்.
திரும்பி வருவோம்:
அத்துடன் இந்த முக்கியமான போட்டியில் கேட்ச்களை கோட்டை விட்டது தோல்வியை பரிசளித்ததாக நேற்றைய போட்டி முடிந்த பின் கூறிய கேஎல் ராகுல் அது போன்ற எளிதான கேட்ச்களை பிடிக்காமல் விட்டால் வெற்றி பெற முடியாது என்று தோல்வியை ஒப்புக்கொண்டார். இந்த வருடம் 17 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு லக்னோவை வழி நடத்திய அவர் முடிந்த அளவுக்கு கேப்டனாக சிறந்த முடிவுகளையும் பேட்டிங்கில் 616 ரன்கள் எடுத்து சிறப்பாக செயல்பட்ட போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை.
தங்களால் முடிந்த அனைத்தையும் களத்தில் கொடுத்த போதிலும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை என டுவிட்டரில் பதிவிட்டுள்ள கேஎல் ராகுல் அடுத்த வருடம் நிச்சயமாக இதை விட வலுவாக திரும்பி வருவோம் என்ற சப்தத்துடன் அணி நிர்வாகத்திற்கும் உரிமையாளருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து வீட்டுக்கு கிளம்பினார்.



