மில்லியன் டாலர் டீம் இந்தியாவை அசால்ட்டா தோற்கடிச்சத மறக்காதீங்க – மீண்டும் வம்பிழுக்கும் ரமீஸ் ராஜா, காரணம் இதோ

Ramiz Raja Sourav Ganguly
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்ல களமிறம்கும் 16 அணிகளில் ஒன்றாக கடந்த 2009க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்பில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் களமிறங்குகிறது. கடந்த வருடம் துபாயில் வரலாற்றில் முதல் முறையாக பரம எதிரியான இந்தியாவை உலகக்கோப்பையில் தோற்கடித்து வரலாற்றை மாற்றி எழுதிய அந்த அணி அரையிறுதியில் தோற்றது. ஆனால் அதன்பின் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற பெரும்பாலான தொடர்களில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அந்த அணி சமீபத்திய ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோற்றாலும் சூப்பர் 4 சுற்றில் வென்று பைனலுக்கு சென்றது.

- Advertisement -

ஆனால் தரவரிசையிடம் 8வது இடத்தில் தவிக்கும் இலங்கையிடம் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அந்த அணி தோல்வியை சந்தித்து வெறும் கையுடன் நாடு திரும்பியது அந்நாட்டவர்களை கடுப்பாக வைத்தது. அதைவிட 17 வருடங்கள் கழித்து இங்கிலாந்தை 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொண்ட அந்த அணி 4 – 3 என்ற கணக்கில் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வி தோல்வியடைந்தது விமர்சனங்களை அதிகப்படுத்தியுள்ளது.

வம்பிழுக்கும் ரமீஸ்:
பாபர் அசாம் – முகமத் ரிஸ்வான் ஆகிய 2 உலகத்தரம் வாய்ந்த வீரர்களை தொடக்க வீரர்களாக கொண்டிருக்கும் அந்த அணியில் அவர்களைத் தவிர்த்து தரமான பேட்ஸ்மேன்கள் இல்லாததால் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதே இந்த தோல்விக்கு முக்கிய காரணமாகும். அதனால் சொந்த மண்ணில் சோபிக்க முடியாத பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் எங்கே கோப்பையை வெல்லப் போகிறது என்று கடுமையான விமர்சனங்கள் அந்நாட்டில் எழுந்துள்ளன. இந்நிலையில் வரலாற்றில் இதை விட தரமான அணியால் தோற்கடிக்க முடியாத பணக்கார இந்தியாவை இதே பாகிஸ்தான் அணி தான் உலகக் கோப்பையில் முதல் முறையாக தோற்கடித்ததாக தெரிவிக்கும் பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா அதேபோல் இந்த உலக கோப்பையிலும் தங்கள்து அணி சிறப்பாக செயல்படும் என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

விமர்சனங்கள் வரும் போதெல்லாம் துபாயில் இந்தியாவை தோற்கடித்ததை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டி வம்பிழுத்து வரும் அவர் இம்முறை இது பற்றி பேசியது பின்வருமாறு. “விமர்சிக்க ரசிகர்களுக்கு உரிமை உள்ளது. எங்களது வீரர்கள் பாகிஸ்தான் ரசிகர்களை ஒன்றிணைத்து அவர்களது முகத்தில் புன்னகையை வரவழைக்கிறார்கள். இந்த அணியில் அனைவரும் உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர்”

- Advertisement -

“அதனால் எங்கள் மீது இவ்வளவு விமர்சனங்கள் வருகிறது என்று பாபர் அசாம் என்னிடம் அடிக்கடி கூறுவார். அதற்கு பாகிஸ்தானில் மற்ற விளையாட்டை விட கிரிக்கெட் அதிக மகிழ்ச்சியை உண்டாக்குகிறது என்பதால் அதைப்பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியாக இருங்கள் என்று நான் பதிலளித்தேன். ஒன்றாக இணைந்து பார்க்கும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களையும் உருவாக்குகிறார்கள். அது ஆக்கபூர்வமாக இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையுமில்லை”

Ramiz-Raja

“மேலும் தற்போதைய பாகிஸ்தான் அணி சில அதிசய சாதனைகளை படைத்துள்ளது. வரலாற்றில் உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்ததை நான் பார்த்ததில்லை. ஆனால் தற்போது அவர்கள் அதை செய்து காட்டியுள்ளனர். ஆனாலும் அதைப் பற்றி நினைக்காத ரசிகர்கள் அது முடிந்த கதை என்பதால் நகர்ந்து செல்வோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த இடத்தில் நீங்கள் சற்று நின்று அந்த சாதனையை போற்ற வேண்டும். ஏனெனில் பில்லியன் டாலர் கிரிக்கெட் சந்தையை கொண்ட இந்தியாவை நாங்கள் தோற்கடித்தோம். அது எளிதல்ல”

“எனவே இந்த அணியில் நல்ல திறமைகள் உள்ளது. இருப்பினும் இந்த அணியின் மிடில் ஆர்டர் மற்றும் பெரிய போட்டிகளில் கேட்ச் தவற விடுவது போன்ற குறைகள் உள்ளன. அதற்காக அதில் வேலை செய்யக்கூடிய விஷயங்கள் அல்ல. இங்கு அனைத்தும் சாத்தியம்” என்று கூறினார். அதாவது உலக கோப்பையில் மட்டுமல்லாமல் ஆசிய கோப்பையிலும் இந்தியாவை தோற்கடித்ததாக தெரிவிக்கும் ரமீஸ் ராஜா விமர்சிப்பவர்கள் அதைப்பற்றி கொஞ்சம் சிந்திக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் குறைகள் இல்லாத அணி இருக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் கடந்த உலக கோப்பை போலவே இம்முறையும் இந்தியாவை தோற்கடித்து தற்போதைய அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement