வீடியோ : ஸ்காட்லாந்து, வெ.இ வீரர்களை கிண்டலடித்து இனவெறி பேச்சு – முன்னாள் பாக் வீரர்களை விளாசும் ரசிகர்கள்

Shaoiab Malik Waqar Younis
- Advertisement -

2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் விளையாடும் கடைசி 4 அணிகளை தீர்மானிக்கும் முதல் சுற்று இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அதில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் நாளை நடைபெறும் அயர்லாந்து – வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து – ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டிகளில் வெல்லும் அணிகள் கடைசி 2 அணிகளாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற உள்ளன. முன்னதாக இத்தொடரில் அக்டோபர் 17ஆம் தேதியன்று நடைபெற்ற 3வது லீக் போட்டியில் 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸை யாருமே எதிர்பாராத வகையில் ஸ்காட்லாந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தது.

அப்படி எதிர்பாராத திருப்பத்தை கொடுத்த அப்போட்டியில் விளையாடிய இருநாட்டு முக்கிய வீரர்களை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் நிறவெறி மற்றும் மனநல ஆரோக்கியம் பற்றி கிண்டலடித்து பேசியது ரசிகர்கள் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. ஆம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையை இந்தியாவில் இருக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்புவதை போல பாகிஸ்தானில் “ஏ ஸ்போர்ட்ஸ்” டிவி எனும் நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது.

- Advertisement -

கிண்டல், நிறவெறி:
அந்த தொலைக்காட்சியில் வல்லுநர்களாக முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், மிஸ்பா-உல்-ஹக் மற்றும் சோயப் மாலிக் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். அந்த நிலையில் அப்போட்டியின் போது ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர் மார்க் வாட் வெற்றிகரமாக பந்து வீசுவதற்காக பயிற்சியாளர்கள் கொடுத்த சில குறிப்புகளை பேப்பரில் எழுதி வைத்து அதை களத்திற்கும் எடுத்து வந்து அவ்வப்போது அதை பார்த்து செயல்பட்டார். அதை பார்த்த பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர் அதில் என்ன எழுதியிருக்கும் என்று முன்னாள் வீரர்களிடம் கேட்டார்.

அதற்கு “அனேகமாக ஸ்காட்லாந்து வீரர்கள் அல்ஜிமெர் அல்லது டிமண்டியா நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனாலேயே பேப்பரில் எழுதி வைத்து விளையாடுகிறார்கள்” என்று கூறினார். அதாவது டிமென்டியா என்பது வயதானவர்களின் நினைவுகளை குறைத்து மறதியை ஏற்படுத்தும் நோயாகும். அந்த வகையில் ஸ்காட்லாந்து வீரர்கள் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிற்சியாளர்கள் கொடுக்கும் அறிவுரைகளை அப்படி பேப்பரில் எழுதி வைத்து பின்பற்றுவதாக தெரிவித்த வக்கார் யூனிஸ் நேரலையில் சிரித்தார். அதைக்கேட்டு இதர முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் சிரித்தது ரசிகர்களுக்கு முதல் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஆனால் அதை விட மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் நிறவெறியை கிண்டலடித்து பேசியது ரசிகர்களை கோபமடைய வைத்தது. ஆம் அதே போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இருக்கும் நிக்கோலஸ் பூரனை மெரூன் வண்ண ஆடைகளை அணிந்த வீரர்களுக்கு மத்தியில் கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்த வாசிம் அக்ரம் அவரது ஜெர்சியின் பின்புறத்தில் இருக்கும் பெயரை பார்த்தால் மட்டுமே அவரை அடையாளம் காண முடிவதாக நிறத்தைப் பற்றி கிண்டலடித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நம்மால் பூரனை பார்க்க முடியவில்லை. அவருடைய ஜெர்ஸியின் பின் புறத்தில் இருக்கும் பெயரை பார்த்து தான் நாம் அவரை பார்க்கிறோம்” என்று கூறினார்.

அப்போதும் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் அனைத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் இணைந்து நேரலையில் சிரித்தார்கள். ஆரம்பத்தில் கண்டுகொள்ளப்படாத இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதைப் பார்க்கும் ரசிகர்கள் ஜாம்பவான்களாக போற்றப்படும் நீங்கள் இப்படி ஒரு வீரரின் மனநலம் மற்றும் நிறத்தை பற்றி பேசலாமா என்றும் உங்களைப் போய் ஜாம்பவான்களாக மதிக்கிறோமே என்றும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

மேலும் வரலாற்றில் எத்தனையோ மோசமான நிறவெறி சர்ச்சைகள் நடந்தது தெரிந்தும் அதிலிருந்து பாடங்களை கற்காமல் இப்படி பேசுவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்களை சாடும் ரசிகர்கள் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக அவ்வாறு எழுதி வைத்து பின்பற்றுவது விதிமுறைகளுக்கு எதிரானது கிடையாது என்ற நிலைமையில் போட்டி முடிந்த பின் பேப்பரில் எந்த மாதிரியான திட்டம் எழுதி இருந்தது என்பதை பற்றி ஸ்காட்லாந்து வீரர் நேரடியாக வெளிப்படையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement