
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 6ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 50வது லீக் போட்டியில் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 55 (46) மஹிபால் லோம்ரர் 54* (29) என முக்கிய பேட்ஸ்மேன்களின் ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 181/4 ரன்கள் சேர்த்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதை தொடர்ந்து 182 ரன்களை துரத்திய டெல்லிக்கு கேப்டன் டேவிட் வார்னர் 22 (14) மிட்சேல் மார்ஷ் 26 (17) பில் சால்ட் 87 (45) ரிலீ ரோசவ் 35* (22) என முக்கிய வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடி தேவையான ரன்களை எடுத்து 16.4 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதனால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை டெல்லி தக்க வைத்துக் கொண்ட நிலையில் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கி வெற்றி நழுவ விட்ட பெங்களூரு 5வது தோல்வியை பதிவு செய்து பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது.
குருவிடம் ஆசிர்வாதம்:
முன்னதாக இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக தன்னுடைய சொந்த ஊரான டெல்லியில் விளையாடிய விராட் கோலிக்கு ஏராளமான உள்ளூர் ரசிகர்கள் ஆரம்பத்திலேயே கோலாகலமான வரவேற்பு கொடுத்தனர். இளம் வயதில் ஆரம்ப காலத்தில் பெரோசா கோட்லா என்றழைக்கப்பட்டு தற்போது அருண் ஜெட்லி என்று மாற்றப்பட்டுள்ள டெல்லி மைதானத்தில் தான் கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கிய விராட் கோலி நாளடைவில் 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி கடந்த 15 வருடங்களாக 3 வகையான போட்டிகளிலும் உலகின் அனைத்து இடங்களிலும் அனைத்து உலகத்தரம் வாய்ந்த பவுவலர்களையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டு 25000+ ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக செயல்பட்டு வருகிறார்.
அப்படி இன்று உலக கிரிக்கெட்டின் ஜாம்பவானாகும் அளவுக்கு உயர்ந்துள்ள விராட் கோலிக்கு டெல்லியைச் சேர்ந்த பிரபல உள்ளூர் பயிற்சியாளர் ராஜ்குமார் அவர்கள் தான் சிறு வயதில் பயிற்சிகளை கொடுத்து வளர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அவரது பயிற்சியில் முதலில் டெல்லி மாநில அணியை வழி நடத்திய விராட் கோலி பின்னர் அண்டர்-19 அளவில் தேர்வு செய்யப்பட்டு இன்று இந்தளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளார்.
அவருக்கு இதே மைதானத்தின் ஒரு பகுதிக்கு விராட் கோலி பெவிலியன் என பெயரை சூட்டி டெல்லி மைதான நிர்வாகம் ஏற்கனவே கௌரவத்தையும் கொடுத்துள்ளது. அப்படி பெரிய ஆளாக வளர்ந்தாலும் தமக்கு பயிற்சிகளை கொடுத்த குருவை மறக்காத விராட் கோலி இந்தப் போட்டிக்கு வந்திருந்த தன்னுடைய பயிற்சியாளரை பல ஆயிரம் ரசிகர்களுக்கு முன்பாக நேரலையில் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்.
இத்தனைக்கும் இவ்வளவு பெரிய ஜாம்பவானாக வளர்ந்துள்ள அவர் காலில் விழ வேண்டிய அவசியமே கிடையாது. இருப்பினும் பெரிய ஆளாக வளர்வதற்கு வித்தைகளை கற்றுக் கொடுத்த குருவை இப்போதும் மறக்காமல் இன்னும் பல சாதனைகளை படைப்பதற்கு விராட் கோலி ஆசீர்வாதம் வாங்கியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்த போட்டியில் தனது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினர் முன் விளையாடியது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க:இதை பண்ணா மட்டும் போதும். இலங்கை டீமோட மிகப்பெரிய சொத்தா பதிரானா மாறுவாரு – தல தோனி பாராட்டு
“என்னுடைய பயிற்சியாளர், அனுஷ்கா மற்றும் என்னுடைய குடும்பத்தினருக்கு முன்னிலையில் எனது பெயரில் பெவிலியன் இருக்கும் இந்த மைதானத்தில் விளையாடுவது எனக்கு மிகவும் ஸ்பெஷலாகும். என்னுடைய மிகப்பெரிய பயணம் முதல் முறையாக தேர்வு குழுவினர் என்னை இந்த மைதானத்தில் பார்த்த போது தான் துவங்கியது. மேலும் முதல் நாளிலிருந்தே அனுஷ்கா என்னுடைய முதுகெலும்பாக இருந்து வருகிறார். தற்போது எங்களுக்கு மகளும் இருப்பது சிறந்த உணர்வாகும்” என்று கூறினார்.